அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரை கொல்ல முயன்ற வழக்கில் ரவுடி குப்பனுக்கு 7 ஆண்டு சிறை
அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜி.ஜி.ரவியை கொல்ல முயன்ற வழக்கில் ரவுடி குப்பனுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
வேலூர்,
வேலூர் முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் ஜி.ஜி.ரவி. இவர் கடந்த 5.9.2015 அன்று வேலூர் காகிதப்பட்டறையில் நடந்த கிருஷ்ணஜெயந்தி விழாவில் கலந்துகொண்டார். பின்னர் அங்கிருந்து தோட்டப்பாளையத்தில் நடந்த தர்மராஜா கோவில் சாமி ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக சென்றார்.
தோட்டப்பாளையத்தில் நடந்து சென்ற போது அவரை பின்தொடர்ந்து வந்த ரவுடிகள் மகா மற்றும் குப்பன் ஆகிய இருவரும் கத்தியால் வெட்டி அவரை கொல்ல முயன்றனர்.
அதை தடுத்த ஜி.ஜி.ரவிக்கு கை, கழுத்து, தாடை ஆகிய பகுதிகளில் வெட்டு விழுந்தது. அருகில் நின்றிருந்த அண்ணாமலை, ராஜ்குமார் ஆகியோரும் காயமடைந்தனர். இதைபார்த்து பொதுமக்கள் ஓடிவந்ததால் மகாவும், குப்பனும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி குப்பன், அனந்தநாராயணன், சதீஷ் என்கிற கும்கி சதீஷ், செண்பகவள்ளி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் கூடுதல் மாவட்ட விரைவு கோர்ட்டில் நடைபெற்றது.
நீதிபதி குணசேகரன் வழக்கை விசாரித்து ரவுடி குப்பனுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். ரவுடி மகா ஏற்கனவே கொலை செய்யப்பட்டு விட்டார். சதீஷ் என்கிற கும்கி சதீஷ் தலைமறைவாக உள்ளாா். செண்பகவள்ளியும், அனந்தநாராயணனும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.
Related Tags :
Next Story