டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கு 3 முறை அபராதம் விதிக்கப்பட்டால் வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் - கலெக்டர் எச்சரிக்கை
டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகி 3 முறை அபராதம் விதிக்கப்பட்ட வீடுகளின் குடிநீர் இைணப்பு துண்டிக்கப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காட்பாடி,
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கான டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் காட்பாடி சன்பீம் பள்ளியில் நடந்தது. கருத்தரங்கிற்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதித்த மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக வேலூர் மாவட்டம் உள்ளது. காய்ச்சல் பாதித்த இடங்களில் உடனடியாக தூய்மைப்பணி மற்றும் வீடுகள், பொது இடங்களில் முறையான ஆய்வு செய்து டெங்கு கொசுப்புழு இல்லை என்பதை உறுதி செய்வதனால் தடுக்க முடியும். விழிப்புணர்வுடன் இருந்தால் டெங்கு காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்தி விடலாம்.
தலைமை ஆசிரியர்கள் தங்களுடைய பள்ளிகளில் தினமும் காலையில் நடைபெறும் பள்ளி பிரார்த்தனை நேரத்தில் டெங்கு காய்ச்சல் குறித்து 10 நிமிடம் கலந்துரையாட வேண்டும். மேலும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு உறுதிமொழியினை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தங்கள் பகுதியில் உள்ள வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் கொசுக்களை அழிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும்.
மேலும் பள்ளியில் மாணவர்களை தூய்மை தூதுவர்களாக நியமிக்கவேண்டும்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 7 நாட்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்பதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவேண்டாம் என பெற்றோரிடம் கூறவேண்டும்.
வீடுகளில் கொசுப்புழு உற்பத்தியாகி இருந்தால் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து 3 முறை ஒரு வீட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டால் அந்த வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். அனைத்து வீடுகளிலும் கொசுவலை மற்றும் டிஜிட்டல் தெர்மா மீட்டர் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஊர்வலமும் நடத்தவேண்டும். உங்கள் பகுதியில் சுகாதார சீர்கேடு இருந்தால் கலெக்டரின் குறைதீர்க்கும் வாட்ஸ் அப் 9498035000 எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். இதன்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் ேபசினார்.
அதைத்தொடர்ந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த உறுதிமொழியினை கலெக்டர் வாசிக்க, அனைத்து தலைமை ஆசிரியர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். டெங்கு கொசுப்புழு இல்லாத பள்ளிகளுக்கு டெங்கு கொசுப்புழு இல்லா பள்ளி என்பதற்கான சான்றிதழ்களை சன்பீம் பள்ளி கவுரவ தலைவர் அரிகோபாலன், சிருஷ்டி பள்ளிகளின் குழுமத்தலைவர் எம்.எஸ்.சரவணன் ஆகியோருக்கும் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சுரேஷ் டெங்கு காய்ச்சல் எதனால் உருவாகிறது, அதனை தடுப்பது எப்படி என்பது குறித்து விளக்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், மாநகராட்சி மருத்துவ அலுவலர் மணிவண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார், காட்பாடி தாசில்தார் பாலமுருகன், ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story