செங்கம் அருகே, குப்பநத்தம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு
செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் அணையில் இருந்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தண்ணீர் திறந்து விட்டார். இதன் மூலம் 47 ஏரிகள் பயன்பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
செங்கம்,
செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் அணையின் முழு நீர்மட்டம் 59.04 அடி ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 700 மில்லியன் கன அடி ஆகும். இந்த அணையில் தற்போது 377.42 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது. அடிப்படை தேவையான குடிநீர், அணை பராமரிப்பு மற்றும் நீர் ஆவியாதல் மூலம் ஏற்படும் இழப்பு ஆகியவை சேர்த்து 133.97 மில்லியன் கன அடி தண்ணீர் தேவை. எனவே, அணையில் மீதம் உள்ள நீர் 243.45 மில்லியன் கன அடி பாசனத்திற்கு நீர் இருப்பு ஆகும்.
இந்த நிலையில் நேற்று குப்பநத்தம் நீர்த் தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக 47 ஏரிகளுக்கு வினாடிக்கு 250 கன அடி வீதம் 243.45 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இது வருகிற 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் 9 ஆயிரத்து 728.04 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குப்பநத்தம் அணையில் நேற்று நடந்த தண்ணீர் திறப்பு விழாவுக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை மத்திய பெண்ணையாறு வடிநில கோட்ட செயற் பொறியாளர் மெய்யழகன் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு அணையில் தானியங்கி மோட்டார் எந்திரத்தின் பட்டனை அழுத்தி ஷட்டரை திறந்து வைத்தார்.
இதில் உதவி செயற் பொறியாளர் சுப்பிரமணியன், செங்கம் உதவி பொறியாளர் ராஜாராமன், திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி, முன்னாள் அமைச்சர் ராமசந்திரன், அ.தி.மு.க. மாவட்ட பேரவை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் அமுதா அருணாசலம், நகர்புற கூட்டுறவு வங்கி தலைவர் குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள், அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story