தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை; மாநகர் பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு


தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை; மாநகர் பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு
x
தினத்தந்தி 19 Oct 2019 3:30 AM IST (Updated: 19 Oct 2019 3:28 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும், மாநகர் பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் மற்ற மாவட்டங்களை விட திருப்பூர் மாவட்டத்தில் வாகன போக்குவரத்தும் அதிகமாக இருந்து வரும்.

ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கும் ஆடைகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடங்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. இதனால் திருப்பூரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ளது. இதன் காரணமாக திருப்பூரில் ஆடைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வந்து கொண்டிருக்கிறார்கள்.

இதனால் குமரன் ரோடு், பார்க்ரோடு் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்து கொண்டிருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், கூட்ட நெரிசலை பயன்படுத்தி வழிப்பறி, செயின்பறிப்பு, ஜேப்படி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களும் நடக்க வாய்ப்புள்ளதால் இதனை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மாநகர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து மாநகர போலீசார் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகை வருகிற 27-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் புத்தாடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க கடை வீதிகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக மாநகர பகுதியில் குமரன் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. பாதசாரிகள் நடந்து செல்லவும் சிரமமாக இருந்து வந்தது. இதனால் குமரன் ரோட்டில் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக இரும்பு தடுப்புகள் வைத்து தனியாக இட வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாநகர் பகுதிகளில் முக்கிய இடங்களில் 80-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போலீசார் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், அதனை சீரமைப்பார்கள். இதுபோல் குற்றச்சம்பவங்களையும் கண்காணிப்பார்கள். இதனால் பொதுமக்கள் எந்த பயமும் இன்றி கடை வீதிகளில் பொருட்கள் வாங்குவதற்கு வரலாம்.இந்த போலீசார் சுழற்சி முறையில் பணியாற்றி வருவார்கள்.

இன்னும் தீபாவளி நெருங்கினால் கூட்ட நெரிசல் அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதலாக போலீசார் பல்வேறு பகுதிகளில் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பார்கள்.புதிய பஸ் மற்றும் பழைய பஸ் நிலையங்களில் ஒலிப்பெருக்கிகளை கட்டி அதன் மூலம் போலீசார் குற்ற சம்பவங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story