மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 15 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி


மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 15 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 18 Oct 2019 10:30 PM GMT (Updated: 18 Oct 2019 10:02 PM GMT)

தாராபுரத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 15 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தாராபுரம்,

தாராபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நகர் பகுதியிலும் அதனைச்சுற்றியுள்ள கிராமப்புறங்களிலும் காய்ச்சல் பரவி வருகிறது. ஒன்றியத்திற்கு உட்பட்ட கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில், குறுப்பநாய்க்கன்பாளையத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். தகவல் அறிந்த மருத்துவ குழுவினர் நேரில் சென்று சிறுமியை பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்தனர். சிறுமிக்கு ரத்த அணுக்கள் குறைந்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதையடுத்து மேல் சிகிச்சைக்காக சிறுமி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டாள்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் பிரிவில் 100-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 15 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 2 பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக டெங்கு காய்ச்சல் பல இடங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரிகள், தாராபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு, மருத்துவக்குழுவுடன் சென்று அங்கு முகாமிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் கொசுவை விரட்டுவதற்கு, புகை அடிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மேலும் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அனைத்து பரிசோதனைகள் அடங்கிய சிகிச்சைக்கு, மாவட்ட நிர்வாகம் போதுமான வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story