ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட நிர்வாகம் தகவல்


ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட நிர்வாகம் தகவல்
x
தினத்தந்தி 19 Oct 2019 4:00 AM IST (Updated: 19 Oct 2019 3:58 AM IST)
t-max-icont-min-icon

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் கிறிஸ்தவர்கள் உரிய காலத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி, 

தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் 2019-20ம் ஆண்டில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ. 20 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் அனைத்து பிரிவினர்களை உள்ளடக்கிய 500 கிறிஸ்தவர்கள், இதில் 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகள் புனித பயணம் மேற்கொள்ள அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இப்புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளிலுள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. www.bcmbcmwtngov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப படிவங்களை படியிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். இத்திட்டத்திற்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, புனித பயணம் செல்ல விருப்பமுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் “ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-20“ என்று குறிப்பிட்டு இயக்குனர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மகால் பாரம்பரிய கட்டிடம் (முதல் தளம்), எழிலக வளாகம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு வருகிற நவம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். எனவே, மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கு ஏதுவாக உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story