பயங்கரவாத தாக்குதல் ஒத்திகைக்கு தாமதமாக வந்த மும்பை போலீஸ்; அதிர்ச்சி அளிக்கும் காரணம்


பயங்கரவாத தாக்குதல் ஒத்திகைக்கு தாமதமாக வந்த மும்பை போலீஸ்; அதிர்ச்சி அளிக்கும் காரணம்
x
தினத்தந்தி 19 Oct 2019 4:09 AM IST (Updated: 19 Oct 2019 4:09 AM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாத தாக்குதல் ஒத்திகை நடந்த இடத்திற்கு மும்பை போலீசார் தாமதமாக வந்தனர். அதற்கு அவர்கள் தெரிவித்த காரணம் அதிர்ச்சியை உண்டாக்கியது.

மும்பை,

நாட்டின் நிதிநகரமான மும்பை பயங்கரவாதிகள் கழுகுகண் பார்வையில் இருந்து வருகிறது. எனவே நகரின் பாதுகாப்பு தொடர்பான சிறு நிகழ்வுகளும் இங்கு பரபரப்பை ஏற்படுத்திவிடும். எனவே மும்பை போலீசார் எப்போதும் உஷார் நிலையில் இருந்து வருகின்றனர். பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் அவ்வப்போது பயங்கரவாத தடுப்பு ஒத்திகைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற ஒரு ஒத்திகை நேற்று மேற்கு புறநகர் கலினாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் நடந்தது.

அங்குள்ள 2 கட்டிடங்களில் பயங்கரவாதிகள் புகுந்து விட்டதுபோல் ஒத்திகை நடத்த வேண்டும் என விமானப்படை, ராணுவம், தேசிய பாதுகாப்பு படை, மும்பை போலீசின் அதிவிரைவுப்படை உள்ளிட்ட பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி அவர்கள் கலினா விமானப்படை நிலையத்துக்கு வந்தனர். இந்த ஒத்திகையில் மும்பை போலீசின் வருகையில் மட்டும் மிகவும் தாமதம் ஏற்பட்டது.

இதற்கான காரணம் பின்னர் தான் தெரியவந்தது. அது அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. போலீசாரின் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டதால் அவர்களால் உடனடியாக அங்கு வந்து சேர இயலவில்லை. உண்மையிலேயே மும்பை நகரம் இப்படி ஒரு பயங்கர தாக்குதலுக்கு இலக்கானால் நகரில் இருக்கும் போக்குவரத்து நெரிசலை முதலில் சமாளித்து பாதுகாப்பு படையினரால் உரிய நேரத்திற்கு அங்கு செல்ல முடியுமா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

இதற்கிடையே, பாதுகாப்பு படையினரின் கூட்டு முயற்சியின் மூலம் பயங்கரவாதிகள் போல் புகுந்தவர்கள் அனைவரும் பிடிக்கப்பட்டனர்.

Next Story