சட்டசபை தேர்தல்: மராட்டியத்தில் இன்று பிரசாரம் ஓய்கிறது; நாளை மறுநாள் வாக்குப்பதிவு


சட்டசபை தேர்தல்: மராட்டியத்தில் இன்று பிரசாரம் ஓய்கிறது; நாளை மறுநாள் வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 18 Oct 2019 11:27 PM GMT (Updated: 18 Oct 2019 11:27 PM GMT)

மராட்டிய சட்டசபை தேர்தலில் அனல் பறக்கும் பிரசாரம் இன்றுடன் ஓய்வதால் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர். ஒரே கட்டமாக நாளை மறுநாள்(திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது.

மும்பை, 

மராட்டிய சட்டசபைக்கு நாளை மறுநாள் 21-ந் தேதி (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

சட்டசபை தேர்தலை ஆளும் பா.ஜனதா - சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து சந்திக்கின்றன. அதேபோல பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கைகோர்த்து இழந்த ஆட்சியை கைப்பற்ற தேர்தல் களத்தில் மல்லுகட்டுகின்றன. ராஜ்தாக்கரே தலைமையிலான மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தனித்து போட்டியிடுகிறது.

இதுதவிர பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி, பகுஜன் சமாஜ், ஐதராபாத் எம்.பி. ஒவைசியின் எம்.ஐ.எம். கட்சிகளும் தேர்தலில் தங்களது பலத்தை காண்பிக்க களத்தில் உள்ளன.

சட்டசபை தேர்தலில் மொத்தம் 3 ஆயிரத்து 239 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பா.ஜனதாவை சேர்ந்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே , காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரிகள், அசோக் சவான், பிரிதிவிராஜ் சவான், தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித்பவார் ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்கள் ஆவர்.

மேலும் மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி வர்ஷா கெய்க்வாட் போட்டியிடுகிறார். இதேபோல மும்பை சயான் கோலிவாடா தொகுதியில் பா.ஜனதா சார்பில் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் சார்பில் கணேஷ் குமார் ஆகிய தமிழர்கள் களம் இறக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த மாதம் 4-ந் தேதி வேட்பு மனு தாக்கல் முடிந்ததை தொடர்ந்து தேர்தல் பிரசாரம் களை கட்ட தொடங்கியது.

பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

பா.ஜனதா - சிவசேனா கூட்டணிக்கு ஆதரவாக உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் மற்றும் மத்திய மந்திரிகள் பிரசாரம் செய்தனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் கடந்த 13-ந் தேதி மராட்டியத்தில் பிரசாரத்தை தொடங்கி தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் தனது கட்சி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார். புதுச்சேரி மாநில காங்கிரஸ் முதல்-அமைச்சர் நாராயணசாமி மும்பையில் தமிழர்களிடம் வாக்கு சேகரித்தார். இதுபோல மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். தலைவர்களின் முற்றுகையால் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது.

நேற்று தலைவர்களின் உச்சகட்ட பிரசாரம் நடந்தது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே உள்ளிட்ட தலைவர்களும் போட்டி போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வேட்பாளர்கள் வீதி, வீதியாக சென்று ஓட்டு வேட்டையாடினார்கள்.

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணியுடன் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்கிறது. இதனால் இன்று தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது இறுதிக் கட்ட பிரசாரத்தை செய்ய உள்ளனர்.

இதைத் தொடர்ந்து நாளை மறுநாள்(திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 24-ந் தேதி (வியாழக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் அறிவிக்கப்படுகின்றன.

Next Story