கூட்டணி ஆட்சி திட்டங்களை நிறைவேற்ற கருவூலத்தில் பணம் இல்லை ; முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு


கூட்டணி ஆட்சி திட்டங்களை நிறைவேற்ற கருவூலத்தில் பணம் இல்லை  ; முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு
x
தினத்தந்தி 19 Oct 2019 5:54 AM IST (Updated: 20 Oct 2019 5:54 AM IST)
t-max-icont-min-icon

முந்தைய கூட்டணி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற கருவூலத்தில் பணம் இல்லை என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் இந்து அறநிலையத்துறை சார்பில் துமகூரு மாவட்டம் குனிகல் தொகுதியில் உள்ள எடியூர் சித்தலிங்கேஸ்வரா கோவில் வளாகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு பணிகளை தொடங்கிவைத்து பேசிய தாவது:-

வட கர்நாடகத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அங்கு நிவாரண பணிகளுக்கு அதிக நிதியை அரசு பயன்படுத்தி வருகிறது. அதனால் முந்தைய கூட்டணி அரசின் ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற கருவூலத்தில் பணம் இல்லை.

வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் அரசின் நிதிநிலை சரியாகிவிடும். அதனால் எம்.எல்.ஏ.க்களின் தொகுதி வளர்ச்சி நிதி கிடைப்பது பற்றி கவலைப்பட தேவை இல்லை. தொகுதிகளின் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்குவதில் மாநில அரசு பாரபட்சமாக நடந்து கொள்ளவில்லை.

நான் ஆட்சி ெபாறுப்புக்கு வந்த பிறகு தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வாபஸ் பெறவில்லை. இந்த விஷயத்தில் அரசு மீது எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் யானவை.

இந்த சித்தலிங்கேஸ்வரா கோவிலை மேம்படுத்த அரசு தயாராக உள்ளது. முன்பு 2008-ம் ஆண்டு நான் முதல்-மந்திரியாக இருந்தபோது இந்த கோவிலின் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கினேன். தற்ேபாது ரூ.40 கோடி நிதி ஒதுக்கினேன். மேலும் இங்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தேவையான நிதி ஒதுக்கப்படும்.

இந்த கோவில் பணிகளில் ஏதாவது தவறுகள் நடந்தால், அதற்கு நிர்வாக அதிகாரிகளே பொறுப்பு. அத்தகைய அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த குனிகல் தொகுதிக்கு தேவையான நிதி ஒதுக்கி தரப்படும். இதில் நான் அரசியல் செய்ய மாட்டேன்.

எனது தலைமையிலான பா.ஜனதா அரசு, மீதமுள்ள ஆட்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்யும். அனைத்து தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் திட்டங்களை செயல்படுத்துவேன். இந்த சித்தலிங்கேஸ்வரா கோவில், எனது குலதெய்வ கோவில். இங்கு நான் ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதும் ஒரு பக்தராக வந்து பூஜை செய்துவிட்டு செல்வேன்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த விழாவில் துமகூரு மாவட்ட பொறுப்பு மந்திரி மாதுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story