சைக்கிளில் சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்: ஆய்வகம், ஓட்டலுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்


சைக்கிளில் சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்: ஆய்வகம், ஓட்டலுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 20 Oct 2019 4:45 AM IST (Updated: 19 Oct 2019 10:57 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் சைக்கிளில் சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் ஒரு ஆய்வகம், ஓட்டலில் ஆய்வு நடத்தி தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் டெங்கு கொசுக்கள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் காலை நேரங்களிலேயே பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று சோதனைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தநிலையில், ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ள தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளர் கா.பாலச்சந்திரன் கடந்த 2 நாட்களாக ஈரோட்டில் பல்வேறு ஆய்வுப்பணிகள் மேற்கொண்டார். இதற்காக ஈரோடு பெருந்துறை ரோடு காலிங்கராயன் இல்லத்தில் இருந்து அவர் புறப்பட்டார். அவருடன் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன், மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மு.பாலகணேஷ், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன், ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசன் உள்பட வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் இருந்தனர்.

அவர்கள் அனைவரும் சைக்கிள்களில் விழிப்புணர்வு ஊர்வலம் புறப்பட்டனர். ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரி கா.பாலச்சந்திரன், கலெக்டர் சி.கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆளுக்கொரு சைக்கிளை ஓட்டிக்கொண்டு பெருந்துறை ரோடு வழியாக இடையன்காட்டு வலசு, சின்னமுத்து வீதி, நடேசர் மில் காம்பவுண்ட் பகுதிகளுக்குள் சென்றனர்.

வழக்கமாக கார்கள், ஜீப்புகளில் வந்து இறங்கும் அதிகாரிகள் சைக்கிள்களில் வந்து குடியிருப்பு பகுதிகளில் இறங்கினார்கள். அங்கு மாநகராட்சி சார்பில் கொசுமருந்து அடிக்கும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கா.பாலச்சந்திரன் பார்வையிட்டார்.

வீடுகளுக்கு சென்ற அதிகாரிகள் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி செய்யும் வகையில் தண்ணீரை தேங்க வைக்கக்கூடாது. கொசு உற்பத்தி கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார் கள். அப்போது அங்கு இருந்த ஆய்வகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ரத்த மாதிரிகள் வைத்திருந்த இடம் சுத்தமின்றி, டெங்கு கொசுக்கள் உற்பத்தி செய்யும் வகையில் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த ஆய்வகத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து கண்காணிப்பு அதிகாரி கா.பாலச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும், இந்த ஆய்வகத்துக்கு மாநகராட்சி குடிநீர் இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிட்டார். இதுபோல் அங்குள்ள ஒரு ஓட்டலில் சோதனை செய்தபோது, அங்கும் டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கான சாதக நிலைகள் இருப்பதை கண்டறிந்த உயர் அதிகாரி கா.பாலச்சந்திரன் ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததுடன், ஓட்டலை சீல் வைத்து பூட்டவும் உத்தரவிட்டார்.

இந்த விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் சோதனையின் போது மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள், தாசில்தார் ரவிச்சந்திரன், பறக்கும்படை தாசில்தார் ஜெயக்குமார், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதுபோல் ஈரோட்டை அடுத்துள்ள பேரோடு பகுதியில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அங்கு ஒரு அச்சகத்தில் சோதனை செய்தபோது டெங்கு கொசுக்கள் உற்பத்தியை கண்டறிந்தனர். உடனடியாக அச்சகத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

பின்னர் அனைத்து துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. அப்போது பேசிய கண்காணிப்பு அதிகாரி கா.பாலச்சந்திரன் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் ரூ.17 கோடியே 9 லட்சம் செலவில் 65 குடிமராமத்து பணிகள் நடக்கின்றன. குடிமராமத்து பணிகள் நடைபெறும் நீர் நிலைகளில் கரைகளை பலப்படுத்துவதோடு, பனை விதைகள் அதிக அளவில் நட வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்புக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் வீடுகள் கேட்டு 3 ஆயிரம் பேர் குறைதீர்க்கும் கூட்டங்களில் மனுக்கள் வழங்கி உள்ளனர். அவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கா.பாலச்சந்திரன் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ம.தினேஷ்(பொது), ரமேஷ்(வளர்ச்சி), ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயசங்கர், குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் வெங்கடேஷ், கீழ்பவானி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் வி.தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story