கோத்தகிரி அருகே பாறையில் படுத்து ஓய்வெடுத்த சிறுத்தைப்புலிகள்


கோத்தகிரி அருகே பாறையில் படுத்து ஓய்வெடுத்த சிறுத்தைப்புலிகள்
x
தினத்தந்தி 20 Oct 2019 4:00 AM IST (Updated: 20 Oct 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே பாறையில் 2 சிறுத்தைப்புலிகள் படுத்து ஓய்வெடுத்தன.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகள் பெரும்பாலும் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இதன் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி கரடி, காட்டெருமை, சிறுத்தை, யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் சாதாரணமாக குடியிருப்பு பகுதிகள், தேயிலை தோட்டங்கள், விளைநிலங்கள் மற்றும் சாலைகளில் தொடர்ந்து உலா வருவது வாடிக்கையாகி வருகிறது.

இதில் அவ்வப்போது பொதுமக்களை வனவிலங்குகள் தாக்குகின்றன. இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரத்தில் கோத்தகிரி அருகே உள்ள தீனட்டி கிராம பகுதியில் தேயிலை தோட்டங்களை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதியில் காணப்படும் பாறைகளின் மீது 2 சிறுத்தைப்புலிகள் வந்து அமர்ந்து ஓய்வெடுப்பதுடன் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு விளையாடி வருகின்றன.

இதனை அப்பகுதி கிராம மக்கள் தொலைவில் இருந்து அச்சத்துடன் பார்த்துச்செல்கின்றனர். மேலும் ஒருசிலர் சிறுத்தைப்புலிகளை தங்களுடைய செல்போனில் படம் பிடித்து செல்கிறார்கள்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் வனப்பகுதியில் வந்து விளையாடும் சிறுத்தைப் புலிகளை காண பொதுமக்கள் செல்ல வேண்டாம்.

மேலும் அவற்றிற்கு தொல்லை கொடுத்தால் அந்த சிறுத்தைப்புலிகள் பொதுமக்களை தாக்க வாய்ப்பு உள்ளது. அதனால் பொது மக்கள் அந்த பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இதேபோல் சிறுத்தைப்புலிகளின் அருகில் சென்று செல்போனில் படம் பிடிக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story