கோவை தொழில்துறையினரின் கோரிக்கைகளை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் - தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு


கோவை தொழில்துறையினரின் கோரிக்கைகளை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் - தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
x
தினத்தந்தி 20 Oct 2019 4:30 AM IST (Updated: 20 Oct 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

கோவை தொழில்துறையினரின் கோரிக்கைகளை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்று கோவையில் நடந்த விழாவில் தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

கோவை,

இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபையின் கோவை கிளை, தென்னிந்திய மில்கள் சங்கம்(சைமா), கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம்(கொடிசியா), தென்னிந்திய என்ஜினீயரிங் உற்பத்தியாளர்கள் சங்கம் (சீமா) ஆகியவை சார்பில் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டு விழா கோவை அவினாசி சாலையில் உள்ள வர்த்தக சபை அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவில், தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களில் வீட்டு உபயோக பொருட்களாக இருந்தாலும், நாட்டு உபயோக பொருட்களாக இருந்தாலும் அதில் கோவையின் பங்கு உள்ளது. இது மிகவும் பெருமையாக உள்ளது. கோவை மக்கள் உழவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்களோ, அவ்வளவு முக்கியத்துவத்தை தொழிலுக்கும் கொடுத்தனர். இந்த மண்ணில் எனக்கு பாராட்டு விழா என்று சொல்வதை விட பகிர்ந்தளிப்பு விழா என்றே சொல்லலாம். கவர்னர் ஆவேன் என்று எனக்கு முன்னரே தெரியாது.

கோவையை சேர்ந்தவர்கள் உழைப்பாளர்கள் மட்டுமல்ல அன்பானவர்கள், மரியாதைக்கு சொந்தமானவர்கள். இந்தியாவின் பொருளாதாரத்தில் பெண்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. முத்ரா திட்டம் மூலம் தமிழகத்தில் 70 சதவீதம் பெண்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் தொழில்முனைவோர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

இங்குள்ள தொழில் துறையினர் நேர்மையாக வரி கட்டுகிறோம் என கூறினார்கள். அதற்கு என்னுடைய பாராட்டுகள். இந்தியா அனைத்து துறையிலும் முன்னேற வேண்டும் என நினைப்பவர் பிரதமர் மோடி. இந்தியாவின் பாதுகாப்பு துறைக்காக நம் நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்கள் உற்பத்தியில் கோவை முக்கிய பங்கு வகிக்கிறது. யோகா செய்வதால் உடலும், மனதும் ஆரோக்கியம் அடைகிறது. இளைய தலைமுறை யினர், தொழில்துறையினர் அனைவரும் யோகா செய்ய வேண்டும். அப்போது தான் வேலையில் முழு கவனம் செலுத்த முடியும்.

பொருளாதாரம் என்று வரும் போது வீட்டு பொருளாதாரத்தையும் பார்க்க வேண்டும், நாட்டு பொருளாதாரத்தையும் பார்க்க வேண்டும். அதற்கு ஆரோக்கியம் அவசியம், யோகா செய்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும். கோவை தொழில்துறையினர் தங்களது கோரிக்கைகள் குறித்து பிரதமரை சந்தித்து பேச நேரம் கேட்டார்கள். கோவை தொழில்துறையினரின் கோரிக்கைகளை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன். தெலுங்கானாவிற்கும் தமிழகத்திற்கும் பாலமாக நான் இருப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை கிளை தலைவர் லட்சுமிநாராயணசாமி, சைமா முன்னாள் தலைவர் ராஜ்குமார், கொடிசியா தலைவர் ராமமூர்த்தி, சீமா துணை தலைவர் டி.விக்னேஷ், ஏ.வி குழுமங்களின் தலைவர் வரதராஜன் உள்பட தொழில்துறையினர் பலர் கலந்துகொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே தட்டாங்குட்டை வள்ளிபுரம் பகுதியில் மகா பெரியசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனின் குல தெய்வ கோவில் ஆகும். கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வந்தார். அவர், தனது மகன் சுகுந்தன், மருமகள் திவ்யா ஆகியோருடன் மதியம் 2.30 மணிக்கு பெருமாநல்லூரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும், தமிழிசை சவுந்தரராஜனுக்கு, பெரியசாமி கோவில் மற்றும் குண்டத்து காளியம்மன் கோவில் சார்பில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

முன்னதாக அவரை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Next Story