சேலத்தில், சுவீட்ஸ் கடை குடோனில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: ரூ.2½ லட்சம் அபராதம்
சேலத்தில் சுவீட்ஸ் கடை குடோனில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்ததுடன் அதன் உரிமையாளருக்கு ரூ.2½ லட்சம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
சேலம்,
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதை தடுக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சேலம் அம்மாபேட்டை அரசமர பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் உள்ள ஓரு தனியார் சுவீட்ஸ் கடைக்கு சொந்தமான குடோனில் நேற்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தலைமையில் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த குடோனில் இருந்து 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த குடோனின் உரிமையாளருக்கு ரூ.2½ லட்சம் அபராதம் விதித்து ஆணையாளர் சதீஷ் நடவடிக்கை எடுத்தார்.
இதுகுறித்து ஆணையாளர் சதீஷ் கூறும் போது, ‘சேலம் மாநகராட்சி பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று(நேற்று) வரை 4 ஆயிரத்து 303 கடைகளில் 51 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.33 லட்சத்து 19 ஆயிரத்து 170 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு விரைவில் தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. ஆய்வின் போது, மாநகர நலஅலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர் கவிதா, சுகாதார ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story