“முஸ்லிம்கள் குறித்து தவறாக பேசவில்லை” அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம்
“முஸ்லிம்கள் குறித்து தவறாக பேசவில்லை“ என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்தார். இதுகுறித்து நாங்குநேரி தொகுதி கருவேலங்குளம் கிராமத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
களக்காடு,
நான் தங்கி இருக்கும் கருவேலங்குளம் வீட்டுக்கு 2 நாட்களுக்கு முன்பு 2 பேர் வந்தனர். அப்போது நான் வெளியே புறப்பட்டு சென்று கொண்டிருந்தேன். அவர்கள் ரேஷன் கடை கட்ட வேண்டும் என்று கேட்டனர். உடனே அவர்களிடம் நான் உங்கள் பகுதியில் எத்தனை வீடுகள் இருக்கிறது, இது தொடர்பாக தாசில்தாரிடம் மனு கொடுத்து விட்டு, அதன் நகலை என்னிடம் மறுநாள் கொண்டு வருமாறு கூறிவிட்டு சென்று விட்டேன்.
பின்னர் அவர்கள், நான் தங்கியிருந்த வீட்டில் சாப்பிட்டு விட்டு சென்றனர். அவர்கள் ஜமாத்தில் இருந்து வந்தவர்கள் மாதிரி தெரியவில்லை, தி.மு.க. கூட்டணியை சேர்ந்தவர்கள். என்னிடம் பேசி, பிரச்சினையை உருவாக்கி பெரிய பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு திட்டமிட்டு வந்துள்ளனர்.
இந்த உண்மை தெரியாமல் ஒருசில முஸ்லிம் அமைப்பினர் எனக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர். நான் எப்போதும் முஸ்லிம் மக்களுடனும், முஸ்லிம் அமைப்புகளுடனும் நெருங்கி பழகி, அவர்கள் மேம்பாட்டுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன். தந்தை-மகன் உறவோடு முஸ்லிம் மக்களிடம் பழகி வருகிறேன். நானும் ஒரு சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவன்தான். முஸ்லிம் சமுதாயம் குறித்து நான் எந்தவித தவறான கருத்துகளையும் கூறவில்லை.
முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களிக்க தயார் நிலையில் உள்ளனர். இதை தடுக்க அவதூறு பிரசாரத்தை தி.மு.க. கூட்டணியினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்சினையில் தி.மு.க. பின்புலமாக இருந்து செயல்பட்டு வருகிறது. அவர்கள் கூறுவது அனைத்தும் பொய். மதபிரச்சினையை தூண்டி விடும் தி.மு.க.வுக்கு வாக்காளர்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.
நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மாபெரும் வெற்றி பெறுவார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story