நாங்குநேரி தொகுதியில் நாளை ஓட்டுப்பதிவு: பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் - கலெக்டர் ஷில்பா பேட்டி


நாங்குநேரி தொகுதியில் நாளை ஓட்டுப்பதிவு: பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் - கலெக்டர் ஷில்பா பேட்டி
x
தினத்தந்தி 20 Oct 2019 3:15 AM IST (Updated: 20 Oct 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி தொகுதியில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக, கலெக்டர் ஷில்பா கூறினார். இதுகுறித்து அவர் நேற்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை,

நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 418 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 389 பேர், பெண்கள் 1 லட்சத்து 29 ஆயிரத்து 748 பேர், மூன்றாம் இனத்தவர் 3 பேர், சர்வீஸ் வாக்காளர்கள் 278 பேர்.

வாக்குப்பதிவு பணியில் மொத்தம் 1,460 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மொத்தம் 299 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. வாக்குச்சாவடிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. 30 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் வாக்குப்பதிவை கண்காணிப்பாளர்கள்.

தேர்தலுக்காக 688 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 359 கட்டுப்பாட்டு கருவிகளும், 404 வி.வி. பேட் கருவிகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும் 89 வாக்குப்பதிவு எந்திரங்களும், 54 கட்டுப்பாட்டு கருவிகளும், 96 வி.வி. பேட் கருவிகளும் கையிருப்பாக வைக்கப்பட்டு இருக்கின்றன. 36 பறக்கும் படையினரும், 36 நிலை கண்காணிப்பு குழுக்களும், ஒரு வீடியோ சர்வேலன்ஸ் குழுவும் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். 35 பேர் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த தொகுதியில் 2,471 மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்கு உதவி செய்ய 170 வீல்சேர்களுடன் தன்னார்வலர்களும் தயார் நிலையில் உள்ளனர். 114 பார்வையற்றவர்கள் வாக்களிக்க வசதியாக வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு பிரெய்லி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது. எல்லா வாக்குச்சாவடிகளிலும் இணையதள கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நேரடியாக கண்காணிக்கப்படும். 95 சதவீதம் பூத் சிலிப் வழங்கப்பட்டு உள்ளது. வாக்காளர்கள் அமருவதற்கு வசதியாக வாக்குச்சாவடிகளில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு உள்ளன.

ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் மட்டும் வாக்குச்சாவடியில் இருக்க வேண்டும். வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் முகவர்கள் முன்னிலையில் ‘சீல்‘ வைக்கப்பட்டு, ஜி.பி.எஸ். பொருத்தப்பட்ட வாகனத்தில் ஏற்றி, வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்படும்.

நாங்குநேரி தொகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

தேர்தல் சம்பந்தமாக 2,358 புகார்கள் வந்தன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்டுப்பாட்டு அறைக்கு 548 புகார்கள் வந்தன. இதில் 503 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மொத்தம் 15 பேரிடம் ரூ.22 லட்சத்து 95 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் உரிய ஆவணங்களை காட்டி ரூ.2 லட்சத்து 99 ஆயிரத்து 500-ஐ திரும்ப பெற்று சென்று உள்ளனர்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வைக்கப்பட்டு இருந்த ரூ.5 லட்சத்து 31 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பணம் கொடுத்தவர்கள் மீதும், பணம் வாங்கியவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும். தபால் ஓட்டுகள் கிடையாது. சர்வீஸ் வாக்குகள் மட்டும் உள்ளன.

இவ்வாறு கலெக்டர் ஷில்பா கூறினார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், தேர்தல் நடத்தும் அலுவலர் நடேசன், தேர்தல் தாசில்தார் தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story