சேலத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.12 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
சேலத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம்,
சேலம் கிச்சிப்பாளையம் களரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சித்திக். இவரது முகவரிக்கு புதுடெல்லியில் இருந்து கூரியர் மூலம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 30 மூட்டைகளில் பார்சல் வந்தது. இதனை களரம்பட்டி காளிகவுண்டர் காடு பகுதியில் சித்திக் உறவினரான ஆரீப் என்பவர் வீட்டில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அங்கிருந்து சேலம் மாநகரில் உள்ள பெட்டிக்கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக ஒரு மினி வேனில் புகையிலை பொருட்களை ஏற்றி செல்வதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கொண்டலாம்பட்டி மண்டல உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆரோக்கிய பிரபு, சிவலிங்கம் மற்றும் கிச்சிப்பாளையம் போலீசார் நேற்று இரவு களரம்பட்டி பகுதியில் சம்பந்தப்பட்ட ஆரீப் என்பவரின் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (ஹான்ஸ் பாக்கெட்) 1,050 கிலோ மொத்தம் 30 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.12 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
புதுடெல்லியில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சேலத்திற்கு அனுப்பியது யார்? வேறு எங்கும் இதுபோன்று புகையிலை பதுக்கி வைக்கப் பட்டுள்ளதா? என்பது குறித்து சித்திக் மற்றும் ஆரீப் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் டவுன் வால்மீகி தெருவை சேர்ந்த அஜ்மல்கான் என்பவர் தீபம் என்ற பெயரில் பீடி கடை நடத்தி வருகிறார். இவரிடம் சித்திக் மற்றும் ஆரீப் ஆகியோர் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் புகையிலை பொருட்கள் கடத்தலுக்கு அஜ்மல்கானுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சேலத்தில் உள்ள பெட்டிக்கடைகளுக்கு மறைமுகமாக புகையிலை பொருட்கள் சப்ளை செய்ய முடிவு செய்திருக்கலாம். ஆனால் களரம்பட்டியில் ஆரீப் என்பவரின் வீட்டிற்குள் புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருந்தபோது அதிகாரிகளிடம் சிக்கி உள்ளது. மேலும் வேறு பகுதியிலும் பதுக்கி வைத்துள்ளனரா? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரூ.12 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் களரம்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story