நாங்குநேரி தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இன்று கொண்டு செல்லப்படுகின்றன -2,700 போலீசாருக்கு பணி ஒதுக்கீடு
நாங்குநேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டு செல்லப்படுகின்றன. பாதுகாப்பு பணிக்கு செல்லும் 2,700 போலீசாருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் அ.தி.மு.க., காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 23 பேர் களத்தில் நிற்கின்றனர். இந்த தொகுதியில் மொத்தம் 299 வாக்குச்சாவடிகள் உள்ளன.
வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, யாருக்கு வாக்களித்தோம்? என்பதை அறிவதற்கான எந்திரம் உள்ளிட்ட தேர்தல் உபகரணங்களை கொண்டு செல்ல 30 மண்டல அலுவலர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவில் 1 மண்டல அலுவலர், 1 மண்டல உதவி அலுவலர், 1 உதவியாளர், 4 துப்பாக்கி ஏந்திய காவலர் என 7 நபர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஒரு குழுவிற்கு 10 முதல் 12 வரை வாக்குப்பதிவு மையம் ஒதுக்கப்பட்டு 30 மண்டல குழுக்கள் 299 வாக்குப்பதிவு மையங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மண்டல அலுவலருக்கு ஒரு வாகனங்கள் வீதம் 30 வாகனங்களும், கூடுதல் கண்காணிப்புக்கு 5 வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை ஏற்றிச்செல்ல இந்த வாகனங்கள் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் போலீஸ் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தும் பணி மும்முரமாக நடந்தது.
மண்டல அலுவலர்கள் செல்லும் ஒரு வாகனத்தில் ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீசார், 2 ஊர்க்காவல் படைவீரர்கள், 2 முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் செல்கிறார் கள். இவர்கள் அனைவரும் நேற்று பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தனர். அங்கு போலீசாருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டன. இவர்கள் வாகனங்கள் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு சம்பந்தப்பட்ட நாங்குநேரி தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்து ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, யாருக்கு வாக்களித்தோம்? என்பதை அறிவதற்கான எந்திரம் உள்ளிட்ட தேர்தல் உபகரணங்களை ஏற்றுகின்றனர். பின்னர் அங்கிருந்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று அவற்றை ஒப்படைக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கு நெல்லை மாவட்ட போலீசார் 2 ஆயிரம் பேரும், மாநகர போலீசார் 200 பேரும், வெளிமாவட்ட போலீசார், ஊர்க்காவல்படையினர், சிறப்பு காவல் படையினர் என மொத்தம் 2 ஆயிரத்து 700 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இவர்களுக்கு நேற்று பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபுநபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் மற்றும் அதிகாரிகள் செய்துள்ளனர்.
மேலும், அந்தந்த வாக்குச்சாவடிகளில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்கு பாதுகாப்பு கோடு வரையப்பட்டு வருகிறது. இந்த பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
Related Tags :
Next Story