களக்காட்டில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
களக்காட்டில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
களக்காடு,
நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், தொகுதி முழுவதும் கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். அவர் நேற்று இறுதிக்கட்டமாக மூலைக்கரைப்பட்டி, இட்டேரி, ரெட்டியார்பட்டி, முனைஞ்சிப்பட்டி, இட்டமொழி, பரப்பாடி, நாங்குநேரி, சீவலப்பேரி, கே.டி.சி.நகர், பர்கிட் மாநகர், ஏர்வாடி, திருக்குறுங்குடி, மாவடி ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எதிர்க்கட்சியினர் என்னை வெளியூர் வேட்பாளர் என கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது தவறு. எனக்கு இந்த தொகுதி தான். எனக்கு இந்த தொகுதியில் ஏராளமான உறவினர்கள் உள்ளனர். நான் ஏழை குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு தொழில் செய்து முன்னேறி இருக்கிறேன்.
நான் உண்மையாக உங்களுக்கு பணி செய்வேன். தொகுதியை லஞ்சம் இல்லாத தொகுதியாக மாற்றுவேன். பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவேன். என்னுடைய முக்கிய நோக்கம் தொகுதியில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவது தான். அதை கண்டிப்பாக நிறைவேற்றி தருவேன்.
விவசாயத்தில் நவீன யுக்திகளை புகுத்தி மேம்படுத்துவேன். குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை நிறைவேற்றி தர பாடுபடுவேன். எனவே எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. உள்பட பலர் உடன் இருந்தனர்.
வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து களக்காட்டில் திருநாவுக்கரசர் எம்.பி. வாக்கு சேகரித்தார்.
அப்போது திருநாவுக்கரசர் எம்.பி. கூறும்போது, ‘நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நாம் பெறப்போகும் வெற்றி இனி வரும் சட்டமன்ற தேர்தலில் நமது கூட்டணி வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வருவதற்கு அஸ்திவாரமாக அமையும். எனவே நீங்கள் கை சின்னத்தில் வாக்களித்து வேட்பாளர் ரூபி மனோகரனை வெற்றி பெற செய்ய வேண்டும்‘ என்றார்.
தொடர்ந்து வேட்பாளர் ரூபி மனோகரன் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை, பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் வடபகுதியில் நிறைவு செய்தார்.
பிரசாரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, வசந்தகுமார் எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி, காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், சக்தி திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.பி.துரை, நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப், ஒன்றிய துணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மாநில வர்த்தக அணி அய்யாத்துரை பாண்டியன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story