சேலத்தில் ரவுடி 2-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது


சேலத்தில் ரவுடி 2-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 19 Oct 2019 9:45 PM GMT (Updated: 19 Oct 2019 8:30 PM GMT)

சேலத்தில் 2-வது முறையாக ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

சேலம், 

சேலம் அம்மாபேட்டை பாரதி நகரை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய ஓட்டலுக்கு கடந்த 1-ந் தேதி நஞ்சம்பட்டியை சேர்ந்த தனசேகரன் (வயது 32), அவருடைய கூட்டாளி ராகதேவனுடன் சென்றார். பின்னர் அவர்கள் பத்மநாபனை கத்தியை காட்டி மிரட்டி கல்லாவில் இருக்கும் பணத்தை கொடுக்குமாறு தகராறு செய்தனர். இந்த பணத்தை கொடுக்க மறுத்ததால் தனசேகரன் கத்தியை திருப்பி ஓட்டல் உரிமையாளரின் வாயில் குத்தியதில் பல் உடைபட்டு காயம் அடைந்தார்.

இதை தடுக்க வந்த பத்மநாபன் மனைவியின் வயிற்றில் அவர் உதைத்தும், ஓட்டலில் இருந்த உணவும் மற்றும் பொருட்களை அடித்தும் நொறுக்கினர். மேலும் அவர்கள் ஓட்டலில் வேலை செய்த ஊழியர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் கல்லாவில் இருந்த ரூ.2 ஆயிரத்தை தனசேகரன், ராகதேவன் எடுத்துவிட்டு அங்கிருந்து சென்றனர். இது தொடர்பான புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனசேகரன், ராக தேவன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட ரவுடி தனசேகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய இன்ஸ்பெக்டர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி, துணை போலீஸ் கமி‌‌ஷனர் தங்கதுரை ஆகியோர் மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமாருக்கு பரிந்துரை செய்தனர். இதை ஏற்று அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமி‌‌ஷனர் நேற்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நகலை சிறையில் உள்ள அவரிடம் போலீசார் வழங்கினர். தனசேகரன் ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் 2-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story