குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர்கள் தடுத்திட வேண்டும் - கலெக்டர் ரத்னா வேண்டுகோள்
குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர்கள் தடுத்திட வேண்டும் என்று கலெக்டர் ரத்னா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரியலூர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள டாக்டர்கள் மற்றும் கிராமப்புற செவிலியர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் அரியலூரில் நடந்தது. இதற்கு கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி பேசுகையில், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012-ஐ நன்கு அறிந்து பயிற்சிக்கு பின்னர் டாக்டர்கள், செவிலியர்கள் களத்தில் திறம்பட பணிபுரிய வேண்டும். வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உறுதி செய்யப்பட வேண்டும். குழந்தை திருமணங்கள் நடைபெறாதவாறு தடுக்கப்பட வேண்டும். குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர்கள் தடுத்திட வேண்டும். பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான தொடுதல் மற்றும் பாதுகாப்பற்ற தொடுதல் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தினை உயர்த்துவதற்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு எதிராக ஏதாவது குற்றங்கள் நடைபெற்றால் 1098 என்ற இலவச தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார்.
பயிற்சி முகாமில், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், மாவட்ட நன்னடத்தை அலுவலர் அருள்தாஸ், பயிற்றுனர்கள் முத்துமாலாதேவி, ரகுமான்கான் மற்றும் டாக்டர்கள், செவிலியர்ககள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story