பள்ளிபாளையம், வெண்ணந்தூரில் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு
பள்ளிபாளையம், வெண்ணந்தூர் பகுதிகளில் குடிமராமத்து திட்ட பணிகள், கொசுப்புழு ஒழிப்பு பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்.
பள்ளிபாளையம்,
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய நகராட்சி பகுதிகளில் வருடம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் நகராட்சி பணியாளர்கள் வீடு, வீடாக சென்று டெங்கு கொசுப்புழுக்கள் உருவாகும் காரணிகள் இருக்கின்றனவா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் குடிநீர் பிடித்து வைக்கும் பாத்திரங்களில் டெங்கு கொசுப்புழுக்கள் உள்ளனவா? என்றும் நேரில் பார்வையிட்டு, வீட்டில் ஆய்வு செய்யப்பட்டது குறித்து வீட்டின் முன்புறம் ஒட்டப்பட்டுள்ள விவரப்பட்டியலில் விவரத்தை குறித்து வருகிறார்கள்.
அதனடிப்படையில் பள்ளிபாளையம் நகராட்சி களக்காடு இரண்டாம் வீதி பகுதியில் டெங்கு கொசுப்புழுக்கள் உருவாகாமல் தடுப்பு நடவடிக்கை பணிகளை நகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு உள்ளார்களா? என்பதனை வீடு வீடாக சென்று மாவட்ட கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டு, பொதுமக்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பள்ளிபாளையம் நகராட்சி ஜெயலட்சுமி திரையரங்கில் டெங்கு கொசு புழுக்கள் உண்டாக்கக்கூடிய காரணிகள் உள்ளனவா? என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பள்ளிபாளையம் நகராட்சி குப்பை கிடங்கையும், பள்ளிபாளையம் பகுதியில் நடந்துவரும் குடிமராமத்து பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
பின்னர் குமாரபாளையம் நகராட்சி பெரந்தார்காடு பகுதியில் உள்ள தெருக்களில் பல்வேறு வீடுகளுக்குச் சென்று டெங்கு கொசு உண்டாகக்கூடிய காரணிகள் உள்ளனவா? என்று ஆய்வு செய்தார். நகராட்சி பணியாளர்கள் வீடுகளுக்குள் வந்து ஆய்வு செய்ய பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பொது மக்களை கேட்டுக் கொண்டார்.
மேலும் 3-வது வார்டு பகுதியில் கோம்புபள்ளம் ஓடையில் மழைநீர் செல்வதை பார்வையிட்டு ஓடையை தூர்வாரும் பணியை மேற்கொள்ளுமாறு நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். குமாரபாளையம் நகராட்சி பகுதியில் குமாரபாளையம் சேலம் ரோடு ராஜன் தியேட்டர் அருகில் சாலையை பார்வையிட்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நகராட்சி அலுவலர்களுடன் கலெக்டர் ஆய்வு செய்தார்.
பின்னர் வெண்ணந்தூர் பேரூராட்சி வெண்ணந்தூர் ஏரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரையமைப்பு, நடைபாதையமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது குமாரபாளையம் தாசில்தார் தங்கம், பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் இளவரசன், குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் ஜகாங்கீர், வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்வேல், பாஸ்கர், வெண்ணந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் வனிதா மற்றும் அரசு அலுவலர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story