முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்
திருவையாறு அருகே முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாயை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற இளம்பெண்ணையும், அவரது காதலனையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருவையாறு,
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண், அங்கு உள்ள ஒரு ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். அந்த பெண்ணின் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு தாயும், மகளும் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். நேற்று அதிகாலையில் வீட்டில் ரத்த வெள்ளத்தில் தனது தாய் பிணமாக கிடப்பதாகவும், அவரை யாரோ அடித்துக்கொன்று விட்டதாகவும் மகள் அழுதுகொண்டே அக்கம், பக்கத்தினரிடம் தெரிவித்தார். உடனடியாக இதுகுறித்து அவர்கள் திருவையாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் இந்த கொலை தொடர்பாக அவர் விசாரணை நடத்தினார். போலீசார் விசாரணை நடத்திக்கொண்டு இருக்கும்போதே கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகள் அங்கிருந்து நழுவிச் சென்றார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகளை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், தன்னை பத்து மாதம் சுமந்து பெற்ற தாய் என்றும் பாராமல் அவரை இரும்பு கம்பியால் அடித்து கொன்றது தெரிய வந்தது.
போலீசாரின் விசாரணையில் கிடைத்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:-
தாயை கொலை செய்த அந்த பெண்ணுக்கும், அவரது உறவுக்கார வாலிபர் ஒருவருக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது. அந்த பெண்ணும், அவரது காதலரும் அண்ணன்-தங்கை உறவு முறை ஆவார்கள். இதை அறிந்த அந்த பெண்ணின் தாயார், நீ காதலிக்கும் பையன், உனக்கு அண்ணன் முறை ஆவார். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் நமது குடும்ப மானம் போய் விடும். எனவே நீ உடனடியாக இந்த காதலை கைவிட்டு விடு. இனிமேல் அந்த பையனை நீ சந்திக்காதே என்று கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலர்கள் இருவரும் ஊரை விட்டு ஓடிவிட்டனர். இது குறித்து அந்த பெண்ணின் தாயார், திருவையாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மைனர் பெண்ணை கடத்திய வழக்கில் அந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த வாலிபர் ஜாமீனில், சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார்.
சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் அந்த வாலிபர் தன் மீதான வழக்கை வாபஸ் பெறுமாறு அந்த பெண்ணின் தாயாரிடம் வற்புறுத்தி உள்ளார். அந்த பெண்ணும் தனது காதலனுக்கு ஆதரவாக தனது தாயாருக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து தாருங்கள் என்று அந்த வாலிபர், அந்த பெண்ணின் தாயாரிடம் கேட்டு உள்ளார்.
அதற்கு அந்த பெண்ணின் தாயாரோ, முறை தவறிய காதலால் தனது மகளை உனக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று கூறியதுடன் இதுபோன்ற எண்ணத்துடன் இனிமேல் தன்னை சந்தித்து பேச வேண்டாம் என்று கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதைக்கேட்ட அந்த வாலிபர், நான் எப்படியும் உனது மகளை திருமணம் செய்வேன். முடிந்தால் தடுத்துப்பார் என்று கூறி தகராறு செய்து விட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இது தொடர்பாக தாய்-மகள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின்போது ஆத்திரம் அடைந்த அந்த இளம் பெண், காதல் கண்ணை மறைக்க தன்னைப்பெற்றெடுத்த தாய் என்றும் பாராமல் இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொன்று உள்ளார். பின்னர் இந்த கொலையை மறைப்பதற்காக யாரோ தனது தாயை கொலை செய்துள்ளதாக அக்கம், பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் தீவிர விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து தாயைக்கொன்ற அந்த இளம்பெண்ணையும், அவரது காதலரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இரும்பு கம்பியால் தாயை இளம்பெண் அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story