அரக்கோணம் அருகே, தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்து 11 மாணவ-மாணவிகள் காயம்
அரக்கோணம் அருகே தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்து 11 மாணவ - மாணவிகள் காயம் அடைந்தனர். அரசு மருத்துவமனை முன்பு பெற்றோர்கள், உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரக்கோணம்,
அரக்கோணத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் தண்டலம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் தண்டலம் கிராமத்தில் இருந்து பள்ளி பஸ்சில் 30 மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது.
மேல்களத்தூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் (வயது 35) என்பவர் பஸ்சை ஓட்டினார். தண்டலம் கிராமத்தை கடந்து பஸ் சென்று கொண்டிருந்த போது சாலை வளைவில் திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகளை மீட்டனர்.
இந்த விபத்தில் ஸ்ரீதர் (14), புவனா (9), முகேஷ் (14), கிஷோர் (14), ரேணுகோபால் (14), தீபக் (9), இமாலயன் (10), ஜெயவர்ஷினி (5), தேவிபிரியா (11), அபினாஷ் (9), தர்ஷினி (7) ஆகிய 11 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர்.
பின்னர் அவர்களை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மாணவன் ஸ்ரீதருக்கு இடது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவனை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசினர் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனை முன்பாக குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் அரக்கோணம் கல்வி மாவட்ட (பொறுப்பு) அலுவலர் புண்ணியகோட்டி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் வேணுசேகரன், தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர் கல்யாணி ஆகியோர் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவ, மாணவிகளுக்கு ஆறுதல் கூறினர். சிகிச்சைக்கு பின்னர் மாணவ, மாணவிகள் வீடு திரும்பினர்.
இந்த விபத்து குறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story