சோதனை குழாய் மூலம் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த 40 வயது பெண்


சோதனை குழாய் மூலம் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த 40 வயது பெண்
x
தினத்தந்தி 20 Oct 2019 3:31 AM IST (Updated: 20 Oct 2019 3:31 AM IST)
t-max-icont-min-icon

சோதனை குழாய் மூலம் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெண் பெற்றெடுத்துள்ளார். தாயும், சேய்களும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினார்கள்.

பெங்களூரு, 

ராஜஸ்தானை சேர்ந்தவர் சகன்லால். இவருடைய மனைவி தாலிபாய் (வயது 40). இவர்கள் 2 பேரும் கடந்த 20 ஆண்டுகளாக விஜயாப்புரா இண்டி ரோட்டில் உள்ள ராஜ்ரத்தன் காலனியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள். சகன்லால் குக்கர் விற்பனை செய்து வருகிறார்.

இந்த தம்பதிக்கு விமலா (21), குட்டி (19) என்ற மகள்களும், லலித் (16) என்ற மகனும் இருந்தனர். இதனால் தாலிபாய் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த நிலையில் விமலாவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. குட்டி மாற்றுத்திறனாளி ஆவார். சமீபத்தில் லலித் இறந்துவிட்டார்.

இந்த நிலையில் தங்களை பார்த்துக்கொள்ள மகன் வேண்டும் என்று சகன்லால்-தாலிபாய் தம்பதி நினைத்தனர். இதனால் சோதனை குழாய் (டெஸ்ட்டியூப்) மூலம் தாலிபாய் குழந்தை பெற முடிவு செய்தார். இதற்கான செயல்முறைகள் பெங்களூருவில் வைத்து தாலிபாய்க்கு மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தாலிபாய் கர்ப்பம் ஆனார்.

விஜயாப்புராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தாலிபாய் அடிக்கடி உடல் பரிசோதனை செய்து கொண்டார். நேற்று முன்தினம் இரவில் தாலிபாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் விஜயாப்புரா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

மேலும் அவருடைய வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. அத்துடன் குழந்தையை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து தாலிபாய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவருடைய வயிற்றில் இருந்து 4 குழந்தைகள் வெளியே எடுக்கப்பட்டது.

இதன்மூலம் ஒரே பிரசவத்தில் 2 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகளுக்கு தாலிபாய் தாயானார். தாயும், சேய்களும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் பிறந்த 4 குழந்தைகளும் தலா 1½ கிலோ எடையுடன் இருப்பதாகவும், தொடர்ந்து குழந்தைகள், தாலிபாய் ஆகியோரை கவனித்து வருவதாகவும் டாக்டர்கள் கூறினார்கள்.

Next Story