லாலாபேட்டை, வெள்ளியணையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
லாலாபேட்டை, வெள்ளியணையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
லாலாபேட்டை,
லாலாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பஞ்சப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சசிகலா தலைமை தாங்கி, டெங்கு கொசுக்களை எவ்வாறு ஒழிப்பது, டெங்கு காய்ச்சல் வராமல் இருக்க வழிமுறைகள், காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களிடம், ஒவ்வொரு மாணவரும் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு சென்று அங்குள்ள குடும்பதலைவரை சந்தித்து டெங்கு காய்ச்சலை தடுக்க வீட்டை தூய்மையாக வைத்து கொள்ளவும், சுற்றுப்புறங்களில் தண்ணீரை தேங்கவிடாமலும் கொசுக்கள் முட்டையிடும் டயர், கொட்டாங்குச்சி ஆகியவற்றை அகற்றுவது பற்றி எடுத்துக்கூற வேண்டும் என்றார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) விக்டர் மார்டின், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் குருசாமி, உடற்கல்வி ஆசிரியர் ஜெயபால், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வெள்ளியணை ஊராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குக்கிராமங்களில் சாலை, தெரு ஓரங்களில் தேங்கிய குப்பைகள், செடி கொடிகள் அகற்றப்பட்டன. மேலும் குடிநீர்தொட்டிகள், தெருக்களில் உள்ள குடிநீர் குழாய் பகுதிகளை சுற்றிலும் தூய்மைப்படுத்தி தண்ணீர் தேங்காத வாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசந்திரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி, சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் பாலுசாமி, ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story