கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி சென்ற சரக்குவேன்-லாரி மோதல் - கியாஸ்-டீசல் வெளியேறியதால் பரபரப்பு


கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி சென்ற சரக்குவேன்-லாரி மோதல் - கியாஸ்-டீசல் வெளியேறியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Oct 2019 4:00 AM IST (Updated: 20 Oct 2019 3:34 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி சென்ற சரக்கு வேன், லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் கியாஸ், டீசல் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர், 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டிலிருந்து கியாஸ் சிலிண்டர்களை ஏற்றி கொண்டு, கரூர் அரசு காலனியில் உள்ள தனியார் ஏஜென்சி குடோனுக்கு சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. வேனை ஈரோடு பெரியவேட்டபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 46) ஓட்டி வந்தார். நேற்று காலை அந்த வேன், கரூர் அருகே கரூர்-சேலம் தேசியநெடுஞ்சாலை வாங்கப்பாளையம் கார்னர் பிரிவுரோடு பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றி கொண்டு வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக, சரக்கு வேன் மீது மோதியது. இதில் லாரியின் முன்பக்கம் சேதமானது. மேலும் லாரியின் டீசல் டேங்க் உடைந்ததால் டீசல் சாலையில் கொட்டியது. இந்த விபத்தில் வேனிலிருந்த சிலிண்டர் ஒன்று சேதமடைந்து, அதிலிருந்து கியாஸ் வெளியேறத்தொடங்கியது. உடனே சுதாரித்து கொண்ட சரக்கு வேன் மற்றும் லாரி டிரைவர்கள் கீழே குதித்து உயிர்தப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்த கரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சேதமடைந்த அந்த சிலிண்டரை வெளியே எடுத்து நுரைதணிப்பானை தெளித்து குளிர்வித்தனர். மேலும் சேதமடைந்த லாரி டீசல் டேங்கிலும் நுரைதணிப்பானை பீய்ச்சி அடித்து பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுத்து பாதுகாப்பு நடவடிக்கையை கையாண்டனர். இந்த சம்பவத்தில் தீயணைப்பு வீரர்களின் துரிதமான செயல்பாட்டால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே மாற்று வேன் வரவழைக்கப்பட்டு அதில் கியாஸ் சிலிண்டர்கள் பாதுகாப்புடன் ஏற்றி குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதற்கிடையே வெங்கமேடு போலீசார் விரைந்து வந்து விபத்துக்குள்ளான வாகனங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி போக்குவரத்தினை சீர் செய்தனர். போலீசார் விசாரணையில், பெங்களூரூவில் இருந்து மதுரைக்கு உருளைக்கிழங்கு ஏற்றி கொண்டு லாரி வந்ததும், அதன் டிரைவர் நாமக்கல் திருச்செங்கோட்டை சேர்ந்த ரமேஷ் என்பதும் தெரிய வந்தது. விபத்து ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர்-சேலம் தேசியநெடுஞ்சாலையில் பெரியார் வளைவு, வாங்கபாளையம் கார்னர் பிரிவு, மண்மங்கலம், செம்மடை ரவுண்டானா உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி விபத்துகள் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. எனவே அங்கு எச்சரிக்கை பலகை அமைப்பதோடு, விபத்து தடுப்பு நடவடிக்கையை மாவட்ட காவல்துறை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story