ராகவேந்திர அவுராத்கர் குழு பரிந்துரைப்படி கர்நாடக போலீசாருக்கு சம்பள உயர்வு; முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
ராகவேந்திர அவுராத்கர் குழு பரிந்துரைப்படி கர்நாடகத்தில் போலீசாருக்கு சம்பள உயர்வு வழங்கி முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் போலீசாரின் சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து கர்நாடக அரசு போலீசாரின் சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க ஐ.பி.எஸ். அதிகாரி ராகவேந்திர அவுராத்கர் தலைமையில் ஒரு குழு அமைத்து உத்தரவிட்டது. அந்த குழு, பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து பார்த்து, சம்பள உயர்வு அறிக்கையை மாநில அரசுக்கு வழங்கியது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளப்படி போலீசாருக்கு சம்பள உயர்வு வழங்க முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது.
அதன் பிறகு எடியூரப்பா தலைமையில் அமைந்த பா.ஜனதா அரசு, போலீசாருக்கு சம்பள உயர்வு வழங்கும் முடிவை ரத்து செய்தது. இதனால் போலீசார் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் தீபாவளி பரிசாகவும், போலீஸ் தியாக தினத்தையொட்டியும் போலீஸ் அதிகாரி ராகவேந்திர அவுராத்கர் குழு அறிக்கையின் பரிந்துரைப்படி போலீசாருக்கு சம்பள உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித் துள்ளார்.
இதுகுறித்து கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ந் தேதி போலீஸ் அதிகாரி ராகவேந்திர அவுராத்கர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளப்படி போலீசாருக்கு சம்பள உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த சம்பள உயர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து பரிந்துரைகளும் அமல்படுத்தப்படுகிறது. இதனால் சாதாரண காவலர்கள் முதல் உயர் போலீஸ் அதிகாரிகள் வரையில் பயன் பெறுகிறார்கள். போலீசாருக்கு அனைவருக்கும் வழங்கப்படும் இடர்ப்பாட்டு படி ரூ.1,000 உயர்த்தப்படுகிறது.
இந்த இடர்ப்பாட்டு படி உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.128.38 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். போலீசாருக்கு சம்பள விகிதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் போலீஸ் பணியில் புதிதாக சேரும் காவலருக்கு ஊதியம் அனைத்து படிகள் உள்பட ரூ.34 ஆயிரத்து 267 கிடைக்கும். இதற்கு முன்பு ரூ.30 ஆயிரத்து 427 ஆக இருந்தது. வரும் நாட்களில் போலீசார் இன்னும் சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
போலீஸ் துறையில் காவலர்களின் அடிப்படை சம்பள விகிதம் ரூ.23,500-ரூ.47,650 ஆகவும், தலைமை காவலர் களுக்கு ரூ.27,650-ரூ.52,650 ஆகவும், உதவி சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ரூ.30,350-ரூ.58,250 ஆகவும், போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு ரூ.43,100-ரூ.83,900 ஆகவும், போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு (ஐ.பி.எஸ். அல்லாதோர்) ரூ.70,850-ரூ.1,07,100 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story