வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தகராறு; சகோலி தொகுதியில் பா.ஜனதா, காங்கிரசார் பயங்கர மோதல்
சகோலி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக ஏற்பட்ட தகராறில் பா.ஜனதா, காங்கிரசார் பயங்கரமாக மோதிக் கொண்டனர். மந்திரியின் உறவினர் காரில் இருந்து ரூ.17¾ லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாக்பூர்,
சட்டசபை தேர்தலில் பண்டாரா மாவட்டத்தில் உள்ள சகோலி தொகுதியில் பா.ஜனதா சார்பில் பொதுப்பணித்துறை இணை மந்திரி பாரினே புகே போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.பி. நானா பட்டோலே களம் இறக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு மந்திரி பாரினே புகேயின் உறவினர் நிதின் நீல்காந்த்ராவ் புகே மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்து அங்கு காங்கிரசார் திரண்டனர். அவர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தட்டிக் கேட்டனர். இதனால் பா.ஜனதா, காங்கிரசாருக்கு இடையே திடீரென பயங்கர மோதல் உண்டானது.
இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இதில் இருதரப்பை சேர்ந்த பலர் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். மோதலில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த நிலையில், நிதின் நீல்காந்த்ராவ் புகேயின் காரில் அதிகளவில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரது காரில் அதிரடி சோதனை போட்டனர். இந்த சோதனையின் போது, பணம் வைக்கப்பட்டு இருந்த சிவப்பு மற்றும் வெள்ளை நிற கவர்கள் அதிகளவில் சிக்கின.
அவற்றில் இருந்த ரூ.17 லட்சத்து 74 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story