கூடலூரில், கடையை சேதப்படுத்திய காட்டு யானை
கூடலூரில் கடையை காட்டு யானை சேதப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கூடலூர்,
கூடலூர் நகரை சுற்றிலும் தேயிலை தோட்டங்களும், அடர்ந்த காடுகளும் உள்ளது. இந்த காடுகளில் காட்டு யானைகள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் காணப்படுகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்துவதுடன், விவசாய பயிர்களையும் சேதப்படுத்துகின்றன.
இந்த நிலையில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தோட்டமூலா பகுதியில் நேற்று அதிகாலை நேரத்தில் ஒரு காட்டு யானை குடியிருப்பு பகுதியில் புகுந்தது. காட்டு யானையின் சத்தம் கேட்ட பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே வர வில்லை. வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர். பின்னர் அந்த காட்டு யானை அந்த பகுதியை சேர்ந்த சிக்கன் என்பவரின் கடை மற்றும் வீட்டை முற்றுகையிட்டது.
அலறல் சத்தம்
அந்த காட்டு யானை சிக்கனின் வீடு மற்றும் கடையின் மேற்கூரையை இடித்து சேதப்படுத்தியது. இதனால் வீட்டிற்குள் படுத்து தூங்கி கொண்டிருந்த சிக்கன் மற்றும் அவரது குடும்பத்தின் பயத்தில் அலறினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அந்த பகுதிக்கு திரண்டு வந்து கூச்சல் போட்டனர். இதையடுத்து காட்டு யானை அங்கிருந்து சென்றது.
கடந்த 2 மாதங்களாக காட்டு யானை வருகையை தடுக்க வனத்துறையினர் அப்பகுதியில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் காட்டு யானை ஊருக்குள் நுழைந்துள்ளது பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று காலை கூடலூர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சேதம் அடைந்த கடையை பார்வையிட்டனர்.
அப்போது அவர்களிடம், காட்டு யானை ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:–
கூடலூர் நகராட்சி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதை தடுக்க அதிகாரிகள் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story