கணவர் மது குடித்ததால் இளம்பெண் தற்கொலை மகனுக்கும் விஷம் கொடுத்தார்


கணவர் மது குடித்ததால் இளம்பெண் தற்கொலை மகனுக்கும் விஷம் கொடுத்தார்
x
தினத்தந்தி 21 Oct 2019 3:45 AM IST (Updated: 20 Oct 2019 10:34 PM IST)
t-max-icont-min-icon

குடிப்பழக்கத்தை மறக்க சிகிச்சை பெற்ற போதிலும் மீண்டும் கணவர் மது குடித்ததால் மனம் உடைந்த இளம்பெண், தனது மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பூந்தமல்லி,

சென்னை நெற்குன்றம் மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் வசந்த கிருஷ்ணன்(வயது 30). இவருடைய மனைவி திவ்யா(27). இவர், தனியார் பள்ளியில் வேலை செய்து வந்தார். இவர்களுடைய மகன் லட்சுமிநாத்(9). இவன், அங்குள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான்.

வசந்த கிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், இதற்காக போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் வசந்த கிருஷ்ணன், மீண்டும் மது குடிக்க தொடங்கினார்.

இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஈக்காட்டுதாங்கல் பகுதியில் வசந்த கிருஷ்ணன் தங்கிவிட்டார். வீட்டில் திவ்யாவும், அவரது மகன் லட்சுமிநாத் மட்டும் தனியாக வசித்து வந்தனர்.

குடிப்பழக்கத்தை மறக்க சிகிச்சை பெற்ற போதிலும் தனது கணவர் மீண்டும் மது குடிக்க தொடங்கியதால் மனம் உடைந்த திவ்யா, நேற்று முன்தினம் தனது மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷத்தை குடித்துவிட்டார்.

அப்போது வீட்டுக்கு வந்த திவ்யாவின் அண்ணன், இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், திவ்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மயக்க நிலையில் இருந்த அவருடைய மகன் லட்சுமிநாத், எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து திவ்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story