சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்போம் பொதுமக்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை


சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்போம் பொதுமக்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
x
தினத்தந்தி 21 Oct 2019 3:30 AM IST (Updated: 20 Oct 2019 11:42 PM IST)
t-max-icont-min-icon

சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்போம் என்று பொதுமக்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் அறிவுரை வழங்கினார்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் மழை நீர் சேகரிப்பு, இயற்கை பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாரத்தான் போட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாரத்தான் போட்டியை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி ஆகியோர் கொடியசைத்்து தொடங்கி வைத்தனர். மாரத்தான் போட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி அம்பேத்கர்நகரில் உள்ள செல்லிஅம்மன் கோவில் வரை நடந்தது.

பின்பு போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் பேசியதாவது:-

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பொய்த்து வறட்சி நிலவுகிறது. மழை பொய்த்து போனதால் பிரதான ஏரிகள் வறண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இருப்பினும் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு விவசாய கிணறுகள், கல்குவாரிகளில் இருந்து குடிநீரை பெற்று வினியோகம் செய்தது. ரெயில்கள் மூலமும் குடிநீர் வினியோகம் செய்தது. இது போன்ற சூழ்நிலைகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க ஒவ்வொருவரும் மரக்கன்றுகள் நட்டு அவற்றை பராமரிக்க வேண்டும்.

வீடுகள், கடைகள், வியாபார நிறுவனங்களில் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டும். சாலை விதிகளை கடை பிடித்து வாகனங்கள் ஓட்டினால் விபத்துகள் தடுக்கலாம். குறிப்பாக இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள், பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் கட்டாயம் அணியவேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை விட்டுவிட வேண்டும். துணிப் பைகளை பயன்படுத்தி இயற்கையை பாதுகாக்க அனைவரும் முன் வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், தாசில்தார் இளவரசி, பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசந்திரபாபு, பள்ளி நிர்வாகிகள் சுதர்சனம், பாலகிருஷ்ணன், அவந்திகா மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Next Story