எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் லிப்டில் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை


எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் லிப்டில் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 21 Oct 2019 4:00 AM IST (Updated: 21 Oct 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் லிப்டில் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதை ஆசாமி கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை எழும்பூரில் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. பிரசவம் மற்றும் குழந்தைபேறு சம்பந்தப்பட்ட சிகிச்சைகள் இங்கு அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளை காண அவர்களது உறவினர்கள் வருவது வழக்கம்.

அந்தவகையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தனது உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக நேற்றுமுன்தினம் இரவு 10 வயது சிறுமி தனது தந்தையுடன் ஆஸ்பத்திரிக்கு வந்தாள்.

2-வது மாடியில் உள்ள சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினரை பார்ப்பதற்காக அங்கிருந்த லிப்டில் அந்த சிறுமி தனது தந்தையுடன் ஏறினாள். போதை ஆசாமி ஒருவரும் அந்த லிப்டில் ஏறியுள்ளார். லிப்டில் அவர்கள் 3 பேர் மட்டும் இருந்துள்ளனர்.

சிறுமி தனது தந்தைக்கும், அந்த ஆசாமிக்கும் நடுவில் நின்று கொண்டிருந்தாள். அப்போது அந்த ஆசாமி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமி இது குறித்து தனது தந்தையிடம் கூறினாள்.

இதையடுத்து லிப்டில் இருந்து வெளியே வந்ததும், அவரது தந்தையும், பொதுமக்களும் அந்த ஆசாமிக்கு தர்மஅடி கொடுத்தனர். இதையடுத்து அவரை ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சஞ்சய் காந்தி(வயது 37) என்பதும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் போதை ஆசாமியை கைது செய்தனர். அதன்பின்பு இந்த வழக்கு சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

Next Story