மேற்குதொடர்ச்சி மலையில் பலத்த மழை: அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேற்குதொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்ததால், அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தளி,
உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற ஆறுகளை ஆதாரமாகக் கொண்டு அமராவதிஅணை கட்டப்பட்டுள்ளது. அதன் மூலமாக அணைக்கு மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகின்றது. அதை அடிப்படை நீராதாரமாகக்கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் மேற்குதொடர்ச்சி மலைகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. இதையடுத்து அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அமராவதி அணைக்கு தொடர் நீர்வரத்து இருந்து வந்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழுகொள்ளளவை எட்டியது. அதைத் தொடர்ந்து கடந்த மாதம் 20-ந்தேதி அமராவதி அணையில் இருந்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் நெல் சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தற்போது அமராவதி, கல்லாபுரம், ராமகுளம் உள்ளிட்ட பகுதிகளில் நடவுப்பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.
இதனால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்ட வண்ணம் உள்ளது. அதுமட்டுமன்றி வடகிழக்கு பருவமழையும் கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இதன்காரணமாக அணைக்கு கடந்த ஒருவாரமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி அணையில் 77.30 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1104 கன அடி தண்ணீர் வந்துகொண்டுள்ளது.அணையிலிருந்து வினாடிக்கு அமராவதி ஆற்றில் 605 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Related Tags :
Next Story