மொடக்குறிச்சி அருகே, பெண்ணிடம் நகையை பறித்த காதலர்கள் கைது
மொடக்குறிச்சி அருகே பெண்ணிடம் நகையை பறித்த காதலர்களை போலீசார் கைது செய்தனர்.
மொடக்குறிச்சி,
சேலம் மாவட்டம் மல்லூரை சேர்ந்தவர் ஜானகி. தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் வீட்டு உபயோக பொருட்களின் முகவராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது பேஸ்புக்கில் நிறுவன பொருட்களை விளம்பரப்படுத்தினார்.
இதை பேஸ்புக்கில் பார்த்த ஒருவர் உங்கள் பொருட்களை வாங்க வேண்டும். எனவே அந்த பொருட்களை எடுத்துக்கொண்டு ஈரோடு பஸ் நிலையம் வாருங்கள் என்றார். அதை உண்மை என்று நம்பிய ஜானகி அந்த பொருட்களின் மாதிரிைய எடுத்துக்கொண்டு சம்பவத்தன்று மதியம் ஈரோடு பஸ் நிலையம் வந்தார்.
அதேபோல் பொருட்கள் வாங்குவதாக கூறிய அந்த நபரும் அங்கு வந்தார். அவர்கள் 2 பேரும் ஜானகியிடம், வீடு பக்கத்தில் தான் இருக்கிறது. எனவே வீட்டுக்கு வாருங்கள். அங்கு வைத்து பேசிக்கொள்ளலாம் என்றார்.
அதைத்தொடர்ந்து அந்த நபர் தன்னுடைய மோட்டார்சைக்கிளில் ஜானகியையும் தன்னுடன் வந்த பெண்ணையும் ஏற்றிக்கொண்டு சென்றார். மொடக்குறிச்சி அருகே சென்றபோது திடீரென அந்த நபர் மோட்டார்சைக்கிளை நிறுத்தினார்.
பின்னர் அவர்கள் 2 பேரும் ஜானகியிடம் நீ கழுத்தில் அணிந்திருக்கும் தாலிசங்கிலியை கழற்றி கொடு என்று கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தனர். இதனால் பயந்து போன அவர் 7 பவுன் தாலிசங்கிலியை கழற்றி அவர்களிடம் கொடுத்தார்.
நகையை வாங்கியதும் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் தப்பித்து அங்கிருந்து சென்றனர். நகையை பறிகொடுத்த ஜானகி இதுபற்றி மொடக்குறிச்்சி போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் சோலார் அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஒரு ஆணும் பெண்ணும் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ராஜீவ்நகரை சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது 27), பரமத்தி வேலூர் அருகே உள்ள மோகனூரை சேர்ந்த சுகன்யா (29) என்பதும், 2 பேரும் காதலர்கள் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story