முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாய் கொலை: இளம்பெண்-காதலன் கைது
திருவையாறு அருகே முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாயை கொலை செய்த இளம்பெண்ணையும், அவரது காதலனையும் போலீசார் கைது செய்தனர்.
திருவையாறு,
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண், அங்கு உள்ள ஒரு ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். அந்த பெண்ணின் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.நேற்று முன்தினம் அதிகாலையில் வீட்டில் ரத்த வெள்ளத்தில் தனது தாய் பிணமாக கிடப்பதாகவும், அவரை யாரோ அடித்துக்கொன்று விட்டதாகவும் மகள் அழுதுகொண்டே அக்கம், பக்கத்தினரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை நடத்திக்கொண்டு இருந்த போதே கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகள் அங்கிருந்து நழுவிச் சென்றார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகளை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது. அந்த பெண்ணும், அவரது காதலரும் அண்ணன்-தங்கை உறவு முறை ஆவார்கள். முறைதவறிய காதலை அறிந்த அந்த பெண்ணின் தாயார் கண்டித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலர்கள் இருவரும் ஊரை விட்டு ஓடிவிட்டனர். இது குறித்து அந்த பெண்ணின் தாயார், திருவையாறு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மைனர் பெண்ணை கடத்திய வழக்கில் அந்த வாலிபரை கைது செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த வாலிபர் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். இதை தொடர்ந்த அந்த வாலிபர் தன் மீதான வழக்கை வாபஸ் பெறுமாறு அந்த பெண்ணின் தாயாரிடம் வற்புறுத்தி உள்ளார். அதற்கு அந்த பெண்ணின் தயார் மறுத்துள்ளார். உனது தாய் இருக்கும் வரை நாம் சேர்ந்து வாழ முடியாது என காதலன் கூறியுள்ளார். இதனால் சம்பவத்தன்று இரவு அந்த பெண், தாயை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.
இதுதொடர்பான புகாரின் பேரில் திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது பெண்ணையும், காதலனையும் கைது செய்தனர். பின்னர் காதலனை திருவையாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 17வயது பெண்ணை தஞ்சை சிறார் சீர்திருத்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மைனர் பெண்ணாக இருப்பதால் அவரை தஞ்சையில் உள்ள ஒரு காப்பகத்தில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story