கூத்தாநல்லூர் பகுதியில், சம்பா நடவு பணிகள் மும்முரம்


கூத்தாநல்லூர் பகுதியில், சம்பா நடவு பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 21 Oct 2019 4:00 AM IST (Updated: 21 Oct 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் பகுதியில் சம்பா நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கூத்தாநல்லூர், 

கஜா புயலுக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் கடுமையான வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பும், தொடங்கிய பின்பும் மாதக்கணக்கில் கடுமையான வெயில் சுட்டெரித்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குளம், குட்டைகளிலும், ஆறுகளிலும் தண்ணீர் இன்றி வறண்டு கிடந்தது. மேலும் மேட்டூர் அணை வறண்ட நிலையில் காணப்பட்டது. இதனால் பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் கூட பம்பு செட் மூலம் பருத்தி செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு கடுமையான சிரமம் அடைந்தனர்.

இந்த ஆண்டு மழையும் இல்லாமல், ஆற்றில் தண்ணீரும் இல்லாமல் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ளவில்லை. அதனால் மிகவும் கவலையடைந்தனர்.

இந்தநிலையில் மேட்டூர் அணையில் தண்ணீர் அதிகரித்தது. அதன் பின்னர் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனாலும் போதிய மழை பெய்யாததால் சம்பா சாகுபடி பணிகளை தொடங்க பெரும்பாலான விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதோடு ஆற்றிலும் அதிகளவில் தண்ணீர் வந்தது. இதனால் விவசாயிகள் சம்பா நடவு பணிகளை தொடங்கினர்.

தற்போது கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், பழையனூர், அதங்குடி, பூதமங்கலம், பெரியகொத்தூர், குலமாணிக்கம், நாகங்குடி, ஓகைப்பேரையூர், பாரதிமூலங்குடி, பூந்தாழங்குடி, அரிச்சந்திரபுரம், ராமநாதபுரம், புனவாசல், கொத்தங்குடி, திருராமேஸ்வரம், குனுக்கடி, மரக்கடை, வேளுக்குடி, சித்தனங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் சம்பா நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது,

எதிர்பார்த்த அளவு ஆற்றில் தண்ணீர் வருகிறது. பருவமழையும் பெய்து வருகிறது. இதனால் தற்போது தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் கிடைத்திருக்கிறது. எனவே சம்பா நடவு பணிகளை மும்முரமாக செய்து வருகிறோம். சம்பா சாகுபடி பணியில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மகசூல் அதிகமாக கிடைக்கும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story