கரூர், குளித்தலை, உப்பிடமங்கலத்தில், டெங்கு காய்ச்சலை தடுக்க தூய்மை பணி
கரூர், குளித்தலை, உப்பிட மங்கலத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க தூய்மை பணி நடைபெற்றது.
கரூர்,
டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையில் அரசு அலுவலகங்களில் தூய்மை பணி மேற்கொள்வது என கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுடனான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன் பேரில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூய்மை பணிகளை மாவட்ட கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார். அப்போது வளாகத்தில் இருந்த வேண்டாத செடிகள், குப்பைகள் ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டன.
சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்துக்கொள்வதில் அனைவருக்கும் முன்னுதாரணமாக அரசு அலுவலகங்கள் இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூய்மை பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் ராம்குமார், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டும், மழைக்காலங்களில் சாக்கடைகளில் கழிவுநீர் தடையின்றி செல்லும் வகையிலும் குளித்தலை நகராட்சி பகுதியில் உள்ள கழிவுநீர் சாக்கடைகளை தூய்மை படுத்தும் பணி தொடங்கியது. இதையொட்டி முதற்கட்டமாக குளித்தலை பஸ்நிலையத்தின் எதிரே உள்ள பகுதிகள் வழியாகச் செல்லும் கழிவுநீர் சாக்கடைகளில் உள்ள மண்கள், குப்பைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணி நடைபெற்றது.
பொக்லைன் எந்திரங்களை கொண்டும், துப்புரவு பணியாளர்களைக் கொண்டும் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளை குளித்தலை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) புகழேந்தி, துப்புரவு ஆய்வாளர் இஸ்மாயில் ஆகியோர் மேற்பார்வை செய்தனர்.
கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள உப்பிடமங்கலம் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து தூய்மை பணி நடைபெற்றது. இதையொட்டி உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் குடிநீர் தொட்டி, நீர் தேங்கியுள்ள இடங்களில் பேரூராட்சி பணியாளர்கள் கொசு மருந்து அடித்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதில் உப்பிடமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story