நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு


நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 21 Oct 2019 4:00 AM IST (Updated: 21 Oct 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் மெகராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல், 

தமிழக அரசின் உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல் பிரிவு, தீவிர காய்ச்சல் பிரிவு, காய்ச்சலுக்கு பின் கண்காணிப்பு பிரிவு என காய்ச்சல் நோயாளிகளுக்கு 3 வகையான சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் மெகராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:- பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் காய்ச்சல் நோயாளிகள் குறித்து தினந்தோறும் சுகாதார பணிகள் துணை இயக்குனர் மூலமாக அறிக்கை பெறப்பட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒரே பகுதியில் அதிக நபர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் உடனடியாக சுகாதார துறையின் மூலமாக சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, அப்பகுதி கண்காணிக்கப்பட்டு வருகின்றது. அரசு மருத்துவமனையில் காய்ச்சலுடன் வரும் நோயாளிகளுக்கு 2 நாட்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. தொடர்ந்து 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் உள்ளவர்கள் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு அவர்களுக்கு ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கை குறித்து பரிசோதனை செய்யப்படுகின்றது. அதன் அடிப்படையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. காய்ச்சல் பாதிப்பின் போது ரத்த தட்டணுக்கள் குறைந்தால் நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, அவர்களது ரத்த தட்டணுக்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை உயர்வது உறுதி செய்யப்பட்ட பின்பு அவர்கள் காய்ச்சலுக்கு பின் கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு, 72 மணிநேரம் கண்காணிக்கப்படுகின்றார்கள். பின்னர் வீட்டிற்கு திரும்ப அனுப்புகின்றனர். நோயாளிகளுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருப்பதற்காக அரிசி கஞ்சி மற்றும் ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு சர்க்கரை கரைசல் வழங்கப்படுகின்றது. மேலும் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்காக நிலவேம்பு குடிநீர் அனைவருக்கும் வழங்கப்படுகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது கலெக்டர், நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களிடம், தங்கள் வீடு மற்றும் வீட்டின் சுற்றுப்பகுதிகளை சுகாதாரமாக வைத்து கொள்ள அறிவுறுத்தினார். பின்னர் நாமக்கல் நகராட்சி நடராஜபுரம் மற்றும் மேட்டுத்தெரு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டு உள்ள பாத்திரங்களில் கொசுப்புழுக்கள் ஏதேனும் இருக்கின்றனவா? என்றும், முறையாக மூடி பயன்படுத்தப்படுகின்றனவா? என்றும், குப்பைகள் அகற்றப்பட்டு இருக்கின்றதா? என்றும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) சாந்தி, தாசில்தார் பச்சைமுத்து, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆய்வக பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story