பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை கட்டணமின்றி பதிவிறக்கம் செய்யலாம் - கலெக்டர் கதிரவன் தகவல்


பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை கட்டணமின்றி பதிவிறக்கம் செய்யலாம் - கலெக்டர் கதிரவன் தகவல்
x
தினத்தந்தி 20 Oct 2019 10:30 PM GMT (Updated: 20 Oct 2019 8:39 PM GMT)

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை கட்டணமின்றி பதிவிறக்கம் செய்யலாம் என்று கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார். ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

ஈரோடு, 

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெற பொதுமக்கள் இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் அனைத்து பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் கணினியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. எனவே இணையதளம் மூலமாக கட்டணமின்றி எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

பிறப்பு சான்றிதழ் குழந்தையின் முதல் உரிமை. எனவே பிரசவத்துக்கு கர்ப்பிணிகள் ஆஸ்பத்திரிக்கு செல்லும்போது கிராம மற்றும் நகர சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போது 12 இலக்க பேறுசார் மற்றும் குழந்தை நல அடையாள எண், ஆதார் எண், ரேஷன் கார்டு நகல் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும்.

அனைத்து தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்வு குறித்த தகவல்களை அரசுக்கு தெரிவிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது. அதன்மூலம் பிறப்பு, இறப்பு பதிவாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சரிபார்க்கப்படும். பின்னர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் குழந்தைகள் பிறந்தவுடன் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே உள்ள பிறப்பு, இறப்பு மையத்தில் பதிவு செய்யப்பட்டு, ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையை வெளியே கொண்டு செல்லும்போது சான்றிதழ் வழங்கப்படும்.

வீடுகளில் நிகழும் பிறப்பு மற்றும் இறப்பு குறித்த தகவல்களை அந்தந்த பகுதிகளில் உள்ள பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் தெரிவித்து பதிவு செய்துகொள்ளலாம். இந்த சான்றிதழ்களைhttp://crstn.orgஎன்ற இணையதளத்தில் இருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதில் உள்ள க்யூ-ஆர் கோடு சான்றிதழின் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது. 1-1-2018 முன்பு பதிவு செய்யப்பட்ட விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வசதிகளை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறிஉள்ளார்.

Next Story