குடியாத்தம் நகரம் முழுவதும் 87 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகிறது - இன்ஸ்பெக்டர் தகவல்


குடியாத்தம் நகரம் முழுவதும் 87 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகிறது - இன்ஸ்பெக்டர் தகவல்
x
தினத்தந்தி 20 Oct 2019 10:15 PM GMT (Updated: 20 Oct 2019 8:40 PM GMT)

குடியாத்தம் நகரம் முழுவதும் 87 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகிறது என்று டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் கூறினார்.

குடியாத்தம், 

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவே‌‌ஷ்குமார் அறிவுறுத்தலின் பேரில், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் கடந்த சில நாட்களாக குடியாத்தம் நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது தொடர்பான ஆய்வு பணிகள் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து நேற்று காவல்துறை சார்பில் நகரில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது தொடர்பாக நகர முக்கிய பிரமுகர்கள், அனைத்து தரப்பு வியாபாரிகள் சங்கம், வங்கிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமை தாங்கினார். கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், அம்பாலால் குழும தலைவர் கே.ஜவுரிலால்ஜெயின், அரசு வக்கீல் கே.எம்.பூபதி, ரோட்டரி துணை ஆளுனர் ஜெ.கே.என்.பழனி, முன்னாள் நகரமன்ற தலைவர் எம்.பாஸ்கர், ரோட்டரி சங்க தலைவர் பி.எல்.என்.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் பேசுகையில், ‘குடியாத்தம் நகரம் முழுவதும் 87 இடங்களில் 250 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக 47 இடங்களில் உயரிய தரத்துடன், இரவிலும் தெளிவாக தெரியும் வகையில் 120 கேமராக்கள் யு.பி.எஸ். வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. மேலும் 13 இடங்களில் ஒலி பெருக்கிகள் அமைக்கப்பட உள்ளது. இந்த கேமராக்கள் அனைத்தும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் நகர காவல் நிலையத்தில் இருந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். இந்த கண்காணிப்பு கேமராக்களை அமைக்க நகரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றார்.

இதில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் வங்கி மேலாளர்கள், அனைத்து வியாபாரிகள் சங்கங்களை சேர்ந்த பிரமுகர்கள் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதற்கு தேவையான உதவி செய்வதாக தெரிவித்தனர்.

கூட்டத்தில் நகை, அடகு வியாபாரிகள் சங்க தலைவர் சதாசிவன், நெல், அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் என்.இ.கிரு‌‌ஷ்ணன், பிரியா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் வி.என்.டி.சுரே‌‌ஷ், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்வர்அலிகான் உள்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொண்டனர். முடிவில் கண்காணிப்பு கேமரா ஒருங்கிணைப்பாளர் மனோஜ்குமார் நன்றி கூறினார்.

Next Story