ராமநாதபுரத்தில் ஏ.டி.எம். மையத்தில் சிதறி கிடந்த கார்டுகள் - போலீசார் விசாரணை
ராமநாதபுரத்தில் ஏ.டி.எம். மையத்தில் ஏ.டி.எம். கார்டுகள் சிதறி கிடந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் பாரதிநகர் டி-பிளாக் பஸ் நிறுத்தம் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று காலை ஏராளமான ஏ.டி.எம். கார்டுகள் சிதறி கிடந்தன. இந்தநிலையில் ஏ.டி.எம். மையத்திற்கு வந்த சமூக ஆர்வலர் பாலா என்பவர் அந்த கார்டுகளை பார்த்தபோது அது பலரின் பெயரில் உள்ள பல வங்கிகளின் ஏ.டி.எம். கார்டுகள் என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். கேணிக்கரை போலீசார் விரைந்து வந்து அந்த மையத்தில் பார்த்தபோது 14 ஏ.டி.எம். கார்டுகள் இருந்ததை கண்டு அதனை கைப்பற்றி கொண்டு சென்றனர். இந்த கார்டுகள் அனைத்தும் பலரின் பெயரில் பல வங்கிகளில் பெறப்பட்ட கார்டுகள் என்பதும், இந்த கார்டுகள் அனைத்திற்கும் காலாவதி காலம் இன்னும் பல மாதங்கள் இருந்ததும் தெரியவந்தது. சர்வதேச தர அனுமதி கார்டுகளும் இதில் இருப்பது தெரியவந்துள்ளது. பொதுவாக ஏ.டி.எம். கார்டுகள் சேதமடைந்திருந்தாலோ அல்லது காலாவதி காலம் முடிந்திருந்தாலோ வாடிக்கையாளர்கள் புதிய கார்டு வந்ததும் அதனை ஏ.டி.எம். மையத்திற்கு சென்று புதுப்பித்து புதிய பாஸ்வேர்டு போட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வந்ததும் பழைய கார்டினை இனி பயனில்லை என்று கருதி அந்த பகுதியிலேயே போட்டுவிட்டு செல்வது வழக்கம்.
ஆனால், இந்த மையத்தில் கண்டெடுக்கப்பட்ட கார்டுகள் அனைத்தும் இன்னும் செல்லத்தக்க வகையிலான நடைமுறையில் உள்ள கார்டுகள் என்பதுதான் பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக ஏ.டி.எம். மையங்களில் போலி கார்டுகள், திருடப்பட்ட கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுப்பது அடிக்கடி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ராமநாதபுரத்தில் காரைக்குடி மானகிரி நெசவாளர் காலனியை சேர்ந்த கோபி(வயது 25) என்பவர் ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் எடுக்க வரும் முதியவர்களை ஏமாற்றி அவர்களின் கார்டுகளை நைசாக வாங்கி கொண்டு பழைய கார்டுகளை கொடுத்து அனுப்பிவிட்டு அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பல லட்சம் ரூபாயை திருடி மாட்டிக்கொண்டது தெரிந்ததே. இதேபோன்று யாரேனும் இந்த ஏ.டி.எம். கார்டுகளை திருடியோ ஏமாற்றியோ கொண்டு வந்து பணத்தினை எடுத்துவிட்டு கார்டுகளை கீழே போட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை பரிசோதனை செய்தும், கைப்பற்றப்பட்ட கார்டுகளின் விவரங்களின் அடிப்படையிலும் விசாரணை செய்த பின்னரே கார்டுகள் கிடந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story