மேலூரில் மாட்டு வண்டி பந்தயம்
மேலூரில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் வென்ற மாட்டு வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலூர்,
மேலூரில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற போராட்டம் நடத்தி மீட்டெடுத்த மாணவ-மாணவிகள், இளைஞர்கள், பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆண்டுதோறும் பாலத்து பேக்கரி நண்பர்கள் சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான மாட்டு வண்டி பந்தயம் நேற்று மேலூர்-சிவகங்கை சாலையில் நடைபெற்றது. மேலூர் எம்.எல்.ஏ. பெரியபுள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி ஆகியோர் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். பெரிய மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி என்று 2 பிரிவுகளாக பந்தயம் நடத்தப்பட்டது.
முதலில் நடந்த பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 15 வண்டிகள் கலந்துகொண்டன. இதில் முதல் பரிசை புதுக்கோட்டை பொன்பேத்தி மருதுபாண்டிய வல்லாளதேவர் வண்டியும், 2-ம் பரிசை புதுக்கோட்டை திருப்புனவாசல் தங்கராஜ் மற்றும் வல்லாளப்பட்டி உமாபதி ஆகியோர் வண்டிகளும், 3-ம் பரிசை சிவகங்கை விராமதி கருப்பையா வண்டியும் பெற்றது.
பின்னர் சின்ன மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது. மேலும் 2 பிரிவுகளாக நடத்தப்பட்ட சின்ன மாட்டு பந்தயத்தில் மொத்தம் 51 வண்டிகள் கலந்துகொண்டன. முதல் பிரிவில் முதல் பரிசை புதுக்கோட்டை செல்வனேந்தல் சுந்தரராஜன் வண்டியும், 2-ம் பரிசை புதுக்கோட்டை வடகுடி நெல்லி ஆண்டவர் வண்டியும், 3-ம் பரிசை ராமநாதபுரம் மருங்கூர் முகமது வண்டியும் பெற்றது. இதையடுத்து நடந்த 2-ம் பிரிவில் முதல் பரிசை நெல்லை வேலங்குளம் கண்ணன் வண்டியும், 2-ம் பரிசை புதுக்கோட்டை திருவபாடி பெரியசாமி வண்டியும், 3-ம் பரிசை மேலூர் சாத்தமங்கலம் தனுத்ராஸ்ரீ வண்டியும் பெற்றது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் காளை வளர்ப்போர் ஒருங்கிணைந்த நலச்சங்க மாநில தலைவர் மோகன்சாமிகுமார், மாநில பொருளாளர் கண்ணன், மேலூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் சரவணகுமார், ஷாஜகான், உதயகுமார், பல்லவராயன்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் வென்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகளை வழங்கினர்.
வெற்றிபெற்றவர்களுக்கு பணம் மட்டுமின்றி, ஆட்டு குட்டிகள், ஏர் உழும் விவசாய மரகலப்பை, மரக்கன்றுகள், ஹெல்மெட்டுகள், கிரைண்டர், மிக்சிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story