தேனியில் 63 குண்டுகள் முழங்க காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு - கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மலர் வளையம் வைத்து மரியாதை
தேனி ஆயுதப்படை மைதானத்தில் 63 குண்டுகள் முழங்க காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. நீத்தார் நினைவு பீடத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
தேனி,
நாடு முழுவதும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பணியின் போது வீரமரணம் அடைந்த போலீசார், தீயணைப்பு படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தி, அவர்களின் நினைவுகளை போற்றும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் கடந்த 12 மாதங்களில் 292 போலீசார் மற்றும் அதிகாரிகள் பணியின் போது வீரமரணம் அடைந்துள்ளனர். அவர்களின் நினைவை போற்றும் வகையில் தேனி ஆயுதப்படை போலீஸ் கவாத்து மைதானத்தில் நேற்று காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
இதற்காக அங்கு அமைக்கப்பட்டுள்ள நீத்தார் நினைவு பீடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. போலீசார், போலீஸ் அதிகாரிகள் அனைவரும் சட்டையில் கருப்பு பட்டை அணிந்து இருந்தனர். போலீசார் துப்பாக்கிகளுடன் அணிவகுத்து நின்றனர். வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டு 63 குண்டுகள் முழங்க உயிர்நீத்த போலீசாருக்கு மரியாதை செலுத்தினர்.
பின்னர், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி ஆகியோர் நீத்தார் நினைவு பீடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) மணிகண்டன், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார், ஊர்க்காவல் படை உதவி சரக தளபதி அஜய் கார்த்திக், வட்டார தளபதி செந்தில்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள், போலீசார் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story