அயோடின் பற்றாக்குறை நோய் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்


அயோடின் பற்றாக்குறை நோய் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 Oct 2019 10:30 PM GMT (Updated: 21 Oct 2019 3:50 PM GMT)

வேலூரில் நடந்த அயோடின் பற்றாக்குறை நோய் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

வேலூர்,

உலகம் முழுவதும் அயோடின் பற்றாக்குறைவினால் ஏற்படும் நோய் தடுப்பு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி வேலூர் மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் அயோடின் பற்றாக்குறை நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலத்துக்கு சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். வேலூர் டவுன் ஹாலில் இருந்து தொடங்கிய ஊர்வலம் அண்ணாசாலை, பழைய மீன் மார்க்கெட் சிக்னல் வழியாக சென்று கோட்டை காந்திசிலை அருகே நிறைவடைந்தது.

இதில், செவிலிய கல்லூரி மாணவ-மாணவிகள், சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டு ‘அயோடின் குறைபாட்டை ஒழிப்போம்’, ‘அயோடின் பற்றாக்குறைவால் முன்கழுத்து கழலை நோய் உண்டாகும்’, ‘பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை மற்றும் கருசிதைவு ஏற்பட வாய்ப்பு’, ‘குழந்தைகளுக்கு படிப்புத்திறன் பாதிக்கப்படும்’ என்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திச்சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஊர்வலத்தில் நலக்கல்வியாளர் நீதிபதிராஜன், சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தையொட்டி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story