மாவுரெட்டிபட்டி கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு - கலெக்டரிடம் புகார்
மாவுரெட்டிபட்டி கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நாமக்கல்,
திருச்செங்கோடு தாலுகா மாவுரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் மெகராஜிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
மாவுரெட்டிப்பட்டி கிராமத்தில் வண்டிபாதை நிலம் உள்ளது. இந்த நிலத்தின் ஓரமாக ஊரில் யாராவது இறந்துவிட்டால், உடலை புதைத்தோ அல்லது எரித்தோ வருகிறோம். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிலர் வண்டிபாதை நிலத்தில் கற்களை கொட்டி இடையூறு செய்து வருகின்றனர்.
இதுபற்றி கேட்டால், அவ்வாறுதான் செய்வோம், எங்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தின் அருகில் பிணத்தை புதைக்கவோ அல்லது எரிக்கவோ அனுமதிக்க மாட்டோம் என கூறி வருகின்றனர். எனவே தாங்கள் நேரில் பார்வையிட்டு, காலம் காலமாக மயானமாக பயன்படுத்தி வரும் நிலத்தை நாங்கள் பயன்படுத்தி கொள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தக்க உத்தரவு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.
இதேபோல் சேலம் மண்டல குமரன் விசைத்தறி பொது தொழிலாளர் சங்கம் சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-
வெண்ணந்தூர் பொது மயானத்தில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மழை காலங்களில் ஒதுங்கிட நிழற்கூடம் கூட இல்லாமல் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் நிலை உள்ளது. எனவே பொது மயானத்திற்கு சுற்றுச்சுவர், நிழற்கூடம், தண்ணீர் மற்றும் மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story