கிரு‌‌ஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் வழங்கினார்


கிரு‌‌ஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 22 Oct 2019 4:15 AM IST (Updated: 21 Oct 2019 9:58 PM IST)
t-max-icont-min-icon

கிரு‌‌ஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.

கிரு‌‌ஷ்ணகிரி, 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 334 மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக, அழிவின் விழிம்பில் உள்ள பழங்குடியினர் மேம்பாடு திட்டத்தின் கீழ் தேன்கனிக்கோட்டை தாலுகா பெட்டமுகிலாளம் கிராமத்தை சேர்ந்த 11 இருளர் இன பழங்குடியின பயனாளிகளுக்கு தலா ரூ.2.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 27 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வீடுகள் கட்டப்பட்டு வீட்டுக்கான ஒப்படைப்பு ஆணைகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.

தொடர்ந்து பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், ஓசூர் எழில் நகரில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பாக 98 வீடில்லா ஏழை மக்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளையும், கிரு‌‌ஷ்ணகிரி தாலுகா திம்மாபுரம் தரப்பு வருவாய்த் துறையில் கிராம உதவியாளராக பணிபுரிந்து பணிகாலத்தில் சின்னவன் என்பவர் இறந்ததையொட்டி அவரது வாரிசுதாரரான மகன் சுகுமார் என்பவருக்கு கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலராக பணிநியமன ஆணையும் கலெக்டர் வழங்கினார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக தசை சிதைவு நோய் மற்றும் பக்கவாதத்தால் முதுகுதண்டு வடம் பாதிக்கப்பட்ட, 6 பயனாளிகளுக்கு தலா ரூ.74 ஆயிரத்து 500 மதிப்பில் பேட்டரியினால் இயங்ககூடிய சிறப்பு சக்கர நாற்காலி ரூ. 4 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் 115 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, தனித் துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குணசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் கனகராஜ், உதவி ஆணையர் (ஆயம்) முரளி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மகிழ்நன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சேதுராமலிங்கம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய உதவி நிர்வாக பொறியாளர் பாலமுரளிதரன், உதவிப் பொறியாளர் மணிகண்டன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story