தேசிய கடல் மீன்பிடிப்பு மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர் சங்கத்தினர் கோரிக்கை
தேசிய கடல் மீன்பிடிப்பு மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் மீனவர் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் விஷ்ணுசந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் சந்தீப்நந்தூரி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு பைபர் மற்றும் கட்டுமர மீனவர் சமுதாய நலச்சங்க தலைவர் கயாஸ் தலைமையில் செயலாளர் ராஜ் முன்னிலையில் 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், மத்திய அரசால் வெளியிடப்பட்ட தேசிய கடல் மீன்பிடிப்பு (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை) மசோதா 2019-ஐ மீனவர்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்த மசோதா பாரம்பரிய மீனவர்களுக்கு மீன்பிடித்தல் உரிமையை பறிக்கின்ற விதத்தில் அமைந்துள்ளது. இந்த மசோதாவின் படி இந்திய கடலோர காவல்படையிடம் மீனவரின் மீன்பிடிப்பு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கபளிகரம் செய்ய துடிக்கிறது. மசோதாவின்படி தற்போதைய கடல் சூழலில் 12 கடல் மைல் உட்பட்டுள்ள பகுதிகளில் மீன்வளம் குறைந்து காணப்படுவதால் மீனவர்களின் மீன்பிடிப்பு சாத்தியம் இல்லை. இந்த சட்ட முன்வடிவு எந்த ஒரு மீனவர்களிடமும், மீனவ அமைப்பிடமும் ஆலோசிக்கவில்லை. மீனவர் நலச்சட்டம் இயற்றும் போது மீனவரிடமும், மீனவர் அமைப்பிடமும் கருத்து கேட்டு அதை செயல்படுத்த வேண்டும். ஆனால் இந்த சட்டம் அவ்வாறு நடக்கவில்லை.
எனவே இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய தமிழக முதல்-அமைச்சருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இதுதொடர்பாக மீனவ பிரதிநிதிகள் முதல்-அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.
ஆழ்வார்திருநகரி ஒன்றிய இந்து முன்னணி சார்பில் முருகேசன் உள்ளிட்டவர்கள் கொடுத்த மனுவில், ஆழ்வார்திருநகரி ஒன்றிய குரும்பூர் ரெயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பல ஆண்டுகளாக உள்ளது. இந்த கோவிலை அகற்றக்கோரி சிலர் கொடுத்த மனுவின் பேரில், கோவிலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள், பயணிகள், ரெயில்வே ஊழியர்கள் அனைவரும் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்து வருவதால் கோவிலை அகற்றுவதை நிறுத்தி விட்டு, அந்த கோவிலை ரெயில்வே துறையே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக வந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, முஸ்லிம் ஜமாத்தை சேர்ந்தவர்களிடம் தவறாக பேசி அவமதித்துள்ளார். உடனடியாக அவர் முஸ்லிம் சமுதாயத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி துறைமுக பிரதான நான்குவழி சாலையில் அமைந்துள்ள தூத்துக்குடி அனல்மின் நிலைய குடியிருப்பு முகாம்-1 மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மாநகராட்சி 54-வது வார்டுக்குள் அமைந்துள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலைய குடியிருப்பு முகாம் 1-ல் அனல்மின்நிலையத்தில் பணியாற்றும் 1,600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். மேலும் அங்குள்ள ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களில் பல ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இந்த பணியாளர்களின் வசதிக்காக தூத்துக்குடி அனல்மின் நிலைய குடியிருப்பு முகாம்-1 முதல் திருச்செந்தூர் ரோடு ரவுண்டானா வரையும், அதே போல் தூத்துக்குடி அனல்மின் நிலைய குடியிருப்பு முகாம்-2 முதல் முத்தையாபுரம் பல்க் சந்திப்பு ரவுண்டானா வரையும் சாலையின் நடுவில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என்று கூறினர்.
தூத்துக்குடி டூவிபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொசு வலை அமைத்து அதில் படுத்து கொண்டு தனது கோரிக்கை குறித்து கோஷம் எழுப்பி நூதன முறையில் போராட்டம் நடத்தினார். பின்னர் அவர் மாவட்ட கலெக்டரிடம் தனது கோரிக்கை மனுவை கொடுத்தார்.
அந்த மனுவில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அடிக்கடி நடக்கிறது. இரவு நேரங்களில் 2 மணி நேரத்துக்கு மேல் மின்தடை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் அவதிப்படுகிறார்கள். அதே நேரத்தில் டெங்கு பரவும் வாய்ப்பும் உள்ளது. மின்வெட்டு காரணமாக திருட்டு, தங்க சங்கிலி பறிப்பு போன்ற குற்ற சம்பவங்களும் நடக்க வாய்ப்புள்ளது. எனவே மின்வெட்டு இரவு நேரங்களில் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
ம.தி.மு.க. மாநகர செயலாளர் முருகபூபதி மற்றும் பலர் கொடுத்த மனுவில், தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க மாவட்ட கலெக்டர் கண்காணிப்பு குழுக்கள் அமைக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். அதே போல் சாயர்புரத்தை சேர்ந்த முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மச்சேந்திரன் கொடுத்த மனுவில், சாயர்புரம் மீன்கடை தெருவில் இருந்து தனியார் பள்ளிக்கூட மைதானம் அருகில் உள்ள ஓடைக்கு மழை நீர் வடிகால் வசதி முன்பு இருந்தது. தற்போது வடிகால் சிலரின் ஆக்கிரமிப்பால் மழை நீர் சரியாக செல்லாமல் தேங்கி காணப்படுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த வடிகாலை சரிசெய்து மழை நீர் செல்ல வழி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து மற்றும் பலர் கொடுத்த மனுவில், மேலதட்டப்பாறையில் இயங்கி வந்த கால்நடை மருத்துவமனை தற்போது பேரூரணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் மேலதட்டப்பாறை அருகே உள்ள பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெகுதூரம் சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் மீண்டும் மேலதட்டப்பாறைக்கு மருத்துவமனையை மாற்றவேண்டும் என்று கூறி இருந்தார்.
ஓட்டப்பிடாரம் தாலுகா தெற்கு வீரபாண்டியபுரம் பஞ்சாயத்து ஸ்டெர்லைட் ஒப்பந்த தொழிலாளர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், ஸ்டெர்லைட் ஆலை எங்கள் கிராமத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. எங்கள் ஊரில் உள்ள பலரும் ஸ்டெர்லைட் ஆலையில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். தற்போது 1½ வருடமாக ஆலை மூடி கிடப்பதால் அனைவரும் வேலையின்றி தவித்து வருகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலை சார்பில் எங்கள் கிராமத்தில் சமுதாய வளர்ச்சி பணி நடந்து வந்தது. எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற ஆலையை திறக்க வேண்டும். அதே போல் ஆலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவு வழங்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறி இருந்தனர்.
Related Tags :
Next Story