கொணலையில் ஏரிக்கு மழைநீர் வருவதற்கான வழி அமைக்க நிதி உதவி - குறை தீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் மனு


கொணலையில் ஏரிக்கு மழைநீர் வருவதற்கான வழி அமைக்க நிதி உதவி - குறை தீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 22 Oct 2019 4:00 AM IST (Updated: 21 Oct 2019 10:48 PM IST)
t-max-icont-min-icon

கொணலையில் ஏரிக்கு மழைநீர் வருவதற்கான வழி அமைக்க நிதி உதவி அளிக்க ஆவன செய்யுமாறு, குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம், கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

திருச்சி,

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற கலெக்டர் சிவராசு, அவற்றின் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் மண்ணச்சநல்லூர் தாலுகா கொணலை கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:-

கொணலை கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவிலான ஏரி உள்ளது. ஏரிக்கு கிழக்கு, வடக்கு பகுதியில் மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகமாக இருக்கும். சமீபகாலமாக போதிய மழை இல்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அவ்வப்போது பெய்யும் மழைநீர் ஏரியின் வடக்குப்புறத்தில் உள்ள சண்முகா நதி மற்றும் சின்னாறு மூலமாக உப்பாற்றில் கலக்கிறது. எனவே, இந்த இரு ஆறுகளும் இணையும் இடத்தில் தடுப்பணை கட்டி, ஏரியின் உபரிநீர் செல்லும் கால்வாயை தூர்வாரி அகலப்படுத்தி 1,500 அடி வெட்டு வாய்க்கால் மூலமாக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியின் வடக்கு கரைவரை கொணலை ஏரி பாசன விவசாயிகள் நலச்சங்கம் மூலமாக கொண்டு வந்து உள்ளோம். எனவே, மழைநீர் ஏரிக்கு வரும் பொருட்டு 10 அடி அகலம், 15 அடி உயரம் அளவு கொண்ட ‘சட்ரஸ்’(வழி) அமைக்க போதிய நிதி உதவி அளிக்க ஆவன செய்ய வேண்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

கள்ளிக்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கண்தீனதயாளன் நகரில் உள்ள தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

எங்கள் இல்ல நிர்வாகி, முதியோர் இல்லத்திற்கு அனுமதிகோரி, மாவட்ட சமூக நல அலுவலரை சந்திக்க பல மணி நேரம் காத்திருந்தும் அலட்சியப்படுத்தி உள்ளார். எங்களுக்கு ஆதரவு கொடுத்து காப்பாற்றிய நிறுவனத்தை விட்டு இடமாற்றம் செய்தாலோ அல்லது வெளியேற்றினாலோ தற்கொலை செய்து கொள்வோம். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தவறினால் முதல்-அமைச்சருக்கு மேல்முறையீடு செய்வோம், என்று கூறப்பட்டிருந்தது.

வேங்கூர் அருகே உள்ள சாமிநாதபுரத்தை சேர்ந்த திருநங்கைகள் மோகனாநாயக் தலைமையில் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், ‘கடந்த 2017-ம் ஆண்டு திருநெடுங்குளத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் 25 பட்டாக்கள் வழங்கப்பட்டன. சம்பந்தப்பட்ட இடத்தை அதிகாரிகள் இதுவரை அளந்து கொடுக்கவில்லை. மேலும் அங்கிருக்கும் மக்கள் எங்களை உள்ளே விடாமல் விரட்டி அடிக்கிறார்கள். எங்களால் வீட்டு வாடகை கொடுத்து வாழ்வது இயலாமல் உள்ளது. எனவே, தாமதப்படுத்தாமல் பட்டா நிலத்தை அளந்து கொடுக்க ஆவன செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது.

எதுமலை, பெரகம்பி கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவில், ‘திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து எதுமலை வழியாக பெரகம்பி கிராமத்திற்கு 2 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சாலையின் இடையில் விரிவாக்கம் செய்யப்பட உள்ள இடம் வனத்துறைக்கு சொந்தமானது என்பதால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நலன் கருதி வனத்துறை அனுமதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

திருச்சி கருமண்டபம் நேருநகரை சேர்ந்த சுகுமாரனின் மனைவி கனகவள்ளி உள்ளிட்ட சிலர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், திருச்சி சங்கரன் பிள்ளை தெருவில் செயல்படும் தனியார் ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால், அந்த முதலீட்டிற்கு மாதம் ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் தருவதாக 5 மாதத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், சொன்னபடி எதுவும் தராமல் மோசடி செய்து விட்டது. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் முதலீடு பணத்தை திரும்ப கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

Next Story