கீரணத்தம் குடியிருப்பு பகுதிக்குள் கழிவுநீரை வெளியேற்றும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை


கீரணத்தம் குடியிருப்பு பகுதிக்குள் கழிவுநீரை வெளியேற்றும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 Oct 2019 4:00 AM IST (Updated: 21 Oct 2019 10:54 PM IST)
t-max-icont-min-icon

கீரணத்தம் குடியிருப்பு பகுதிக்குள், கழிவுநீரை வெளியேற்றும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

சரவணம்பட்டி,

கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரணத்தம், அக்ரஹாரசாமக்குளம் பகுதியில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் குறித்தும், அப்பகுதியில் தூர்வாரப்பட்ட குட்டைகள் குறித்தும் கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி ஆய்வு மேற்கொண்டார். இதையொட்டி கீரணத்தம் ஊராட்சி அலுவலகம் அருகே குவிந்து கிடந்த குப்பைகளையும், தேங்கி கிடந்த கழிவுநீரையும் உடனடியாக அப்புறப்படுத்த வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் ஊராட்சி செயலருக்கு உத்தரவிட்டார். மேலும் எந்த பகுதியிலும் குப்பைகளை தேங்கவிடாமல் உடனடியாக அகற்ற அறிவுறுத்தினார்.

இதையடுத்து கடந்த மாதம் தூர்வாரப்பட்டு பனை விதைகள் நடப்பட்ட கீரணத்தம் காரகுட்டை மற்றும் கீரணத்தம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் தொட்டி, கழிவுநீர் ஓடைகளை ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மக்கள், குடிநீர் குழாய் உடைந்திருப்பதால் சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என்றும், கழிவு நீர் வெளியே செல்ல வழியில்லாமல் இருப்பதாகவும் புகார் கூறினர். மேலும் எரிவாயு திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழி பல நாட்களாக இருப்பதும், அதில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தியாவதாகவும் முறையிட்டனர். இந்த பிரச்சினைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து கீரணத்தம் பகுதியில் அதிக விடுதிகள் மற்றும் உணவகங்களின் கழிவுநீரை குடியிருப்பு பகுதிக்குள் விடுவதால் நோய் பரவும் அபாயம் அதிகரித்து வருவதாகவும், கீரணத்தம் ஐடி பார்க் பகுதியில் உள்ள கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுவதாகவும் புகார் கூறப்பட்டது. கழிவுநீரை வெளியேற்றினால் அந்த நிறுவனத்தின் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கீரணத்தம் பகுதியில் தேங்கும் குப்பைகளுக்கு தனி கிடங்கு அமைக்க இடம் தேர்வு செய்யவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதையடுத்து அக்ரஹாரசாமக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏ.எஸ்.குளம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், அன்னூர் தாசில்தார் இந்திரா, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தனலட்சுமி, லதா, எஸ்.எஸ்.குளம் வட்டார செயற்பொறியாளர் அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story