ஈரோட்டில் உள்ள ஜவுளிக்கடைகளில் நூதன முறையில் துணிகள் திருடிய 2 பெண்கள் கைது


ஈரோட்டில் உள்ள ஜவுளிக்கடைகளில் நூதன முறையில் துணிகள் திருடிய 2 பெண்கள் கைது
x
தினத்தந்தி 22 Oct 2019 4:30 AM IST (Updated: 21 Oct 2019 11:11 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் உள்ள ஜவுளிக்கடைகளில் நூதன முறையில் துணிகள் திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு, 

தீபாவளி பண்டிகை வருகிற 27-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் துணிகள் வாங்குவதற்காக ஈரோட்டில் உள்ள ஜவுளிக்கடைகளில் குவிந்து வருகிறார்கள்.

இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் கைவரிசை காட்ட கூடும் என்பதால் போலீஸ் தரப்பில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில், 2 பெண்கள் ஜவுளி வாங்குவது போல் நீண்ட நேரமாக சுற்றிக்கொண்டு இருந்தனர். பின்னர் அவர்கள் ஜவுளிகள் எதுவும் வாங்காமல் கடையை விட்டு வெளியே வந்தனர். அந்த 2 பெண்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கடை ஊழியா்கள் கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டனர்.

அப்போது அந்த 2 பெண்களும் துணிகளை திருடி, அதை நூதன முறையில் தங்களது புடவைக்குள் மறைத்து வைப்பது தெரிய வந்தது. உடனே கடை ஊழியர்கள் விரைந்து சென்று அந்த 2 பெண்களையும் பிடித்து ஈரோடு தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில் அவர்கள், வேலூர் மாவட்டம் அரக்கோணம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த சத்யா (வயது 32), கண்ணம்மா (32) ஆகியோர் என்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட துணிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 2 பெண்கள் போலீசாரிடம் கூறும்போது, ‘சமூக வலைதளங்களில் புடவை திருடும் வீடியோவை பார்த்து நாங்களும் அது போன்று எங்களுக்கு தெரிந்த டெய்லர் மூலம் விசேஷமாக புடைவைகள் தைத்து அடியில் பாக்கெட் வைத்து திருடி வந்தோம். கடை ஊழியர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் நாங்கள் திருடுவதை பார்த்து எங்களை பிடித்து விட்டனர்’ என்றார்கள்.

Next Story